astrology dinamani
வழிபாடுகள், பரிகாரங்களால் நமக்கு நன்மைகள் கிடைக்குமா? எப்படித் தெரிந்துகொள்வது..
2018/02/01

வழிபாடுகள், பரிகாரங்களால் நமக்கு நன்மைகள் கிடைக்குமா? எப்படித் தெரிந்துகொள்வது..

ஜாதகத்தின் அடிப்படை ஆதாரமே கிரகங்கள் தான். கிரகங்கள் கண்ணுக்குத் தெரியாத காலத்தின் அங்கம் என்பதாலும், கோள்களைப் பற்றி விஞ்ஞானம் மிகத் தெளிவான விளக்கங்களைச் சொல்லியிருப்பதாலும், பக்தி மார்க்கத்தில் கிரகங்களின் தன்மை மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய அறிவு வலிமையாக உணர்த்தப்பட்டிருப்பதாலும், ஒருவரின் வாழ்க்கையைக் கிரகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையால் மாற்றிவிடலாம் என்கிற அசாத்திய நம்பிக்கையை மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொண்டுவிட்டான்.

இது அந்த அளவுக்குச் சாத்தியமில்லை என்பதை ராமாயணத்தில் ராவணன் – நவக்கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ராவணன் தவ வலிமையால் நவக்கிரகங்களையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். நவக்கிரகங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டே செயல்பட்டன. தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நவக்கிரங்களைப் பயன்படுத்தி, எவருக்குமே சாத்தியமாகாத உன்னதமான பல பலன்களை அவன் தனக்காகப் பெற்றிருக்க முடியும். ஆனால், நடந்தது என்ன என்பதை நாம் அறிவோம்.

கிரகங்களை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒருவனாலேயே தான் விரும்பியபடி வாழ முடியவில்லை. ராவணனின் தவ வலிமை, பலம், அவன் பெற்ற வரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு செயலில் (ராமன் மனைவி சீதையிடம் மையல் கொண்டது) உணர்தலின்றி செயல்பட்டதால் அவன் வாழ்க்கையே பாழ்பட்டது.

இந்நிலையில், நவக்கிரகங்களை சிலை வடிவில், வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களால் உணர்தலின்றி அணுகிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மேலும், வழிபாட்டு ஸ்தலங்களின் தன்மை, வழிபாட்டு முறைகள், வழிபடும் முறைகளைப் பற்றிய தெளிவு நமக்கு அவசியம்.

ஆலயங்களும், வழிபாடுகளும் விஞ்ஞானத்தின் அடைப்படையிலேயே அமைந்துள்ளன. அதற்கென நியதிகள் உள்ளன. ஆனால், அந்த நியதிகள் காலவெள்ளத்தில் மறைந்து உருமாறி, அதன் முழுமையான பரிமாணத்தையும் சக்தியையும் நம்மால் உணர முடியாமல், பெற முடியாமல் இருக்கிறோம். நியதிகள் புரியாமல், அதன் தன்மைகள் பற்றிய அறிவுக் குறைபாடுகளால், மனித மனமும், மத மாச்சார்யங்களால் பலவீனப்பட்டு உணர்வு இழந்த நிலையில், பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு செயலாக வழிபாடுகளை அணுகும்போது, இறைத் தொடர்பு ஏற்படாமல் போய்விடுகிறது.

இறைவனை வழிபடுதலில் இறைத் தொடர்பு அவசியம். இதில் நாம் தெளிவுபெற வேண்டியவை –

  1. இறைவனை வழிபடும் முறை
  2. வேண்டியதைக் கேட்கும் முறை
  3. நமக்கு அருளியதன் பொருளறிந்து நன்றி செலுத்தும் முறை
  4. இறைவன் வழங்கிய பயன்களை அனுபவிக்கும் முறை

மேற்கண்டவற்றுக்கான அடிப்படைத் தேவை அன்பு, பக்தி, ஒழுக்கம். இவையில்லாத வழிபாடுகளால், பரிகாரங்களால் இறைத்தொடர்பு கிடைக்காது, இறைவனும் மகிழ்வதில்லை.

இறைவனை வழிபடும் முறை

ஆலயங்களுக்கென விஞ்ஞானம் உள்ளது. இறைவனை வழிபடுதலில் விஞ்ஞான முறைப்படி செய்யப்பட வேண்டியவற்றில், அதைப் பற்றிய தெளிவு இல்லாமல் வழிபடுவதால், தவறுகள் இருப்பினும் இறைவனின் மேன்மையை முழுவதும் உணர்ந்து, அதன் உயிருள்ள தன்மையை மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டு, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனுக்கு நாம் செய்யும் செயல்களால், இறைக்கும் நமக்குமான தொடர்பு ஏற்பட்டு, நம்முடைய வழிபாட்டையும் பரிகாரத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டு நமக்கான நன்மைகளை இறைவன் வழங்கிவிடுகிறான்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை. வேடர் குலத்தில் பிறந்த கண்ணப்ப நாயனார், ஒருநாள் காட்டில் சிவலிங்கத்தைக் காண்கிறார். சிவலிங்கத்தைப் பார்த்தவுடன் பரவசமடைந்த கண்ணப்ப நாயனாருக்கு திடீரென பயம் வருகிறது. இந்த அடர்ந்த காட்டில் இறைவன் தனியாக இருக்கிறாரே, ஏதாவது கொடும் விலங்குகள் தாக்கிவிடுமோ என்று அஞ்சி, இரவு முழுவதும் காவல் இருக்கிறார். விடிந்ததும் வீடு திரும்புவதும், பின் இரவில் காவல் காப்பதுமாகத் தொடர்கிறார்.

prayer

இதற்கிடையே, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பூசாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பார்த்தபோது, இறைவன் பசிக்கு உணவு கொடுக்க வேண்டும்; நீரால் அபிஷேகம் செய்து பூச்சூட வேண்டும் என்பதை உணர்கிறார். உணவுக்காக விலங்குகளை வேட்டையாடி மாமிச உணவைத் தயார் செய்து, அவற்றில் சுவையான பகுதிகளை உண்டு பார்த்து சேகரிக்கிறார். அபிஷேகத்துக்கு நீர் எடுத்துச் செல்ல பாத்திரம் இல்லாததால், வாயில் நீரை வைத்துக்கொண்டும், பூக்களைச் சேகரிக்க கூடை இல்லாததால் காதிலும், கழுத்திலும் அணிந்து சென்று இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறார்.

சாஸ்திரப்படி, அவர் செய்த செயல்களின் விளைவு என்ன என்பது நமக்குத் தெரிந்தாலும், கண்ணப்ப நாயனாருக்கு நிகழ்ந்த நன்மையும், பெருமையும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வழிபாட்டுக்கு முக்கியம் பொருட்கள் மட்டுமல்ல; வழிபாடு செய்பவர் இறைவன் மேல் வைத்திருக்கும் அன்பும், பக்தியும்தான் என்பது புலனாகும்.

வேண்டியதைக் கேட்கும் முறை
இறைவனிடம் தனக்கு இன்ன பலன் வேண்டும் எனக் கேட்பது ஒன்று; எத்தகைய பலன்கள் கிடைத்தால் நிரந்தர முழுத் தீர்வு கிடைக்குமோ, அதை வழங்கும்படி பிரார்த்திப்பது மற்றொன்று.

தனக்கு என்ன பலன் வேண்டும் எனக் கேட்டுப் பெறும்போது, அப்பலன்களால் ஏற்படும் எதிர்விளைவுகளுக்கு இறைவன் பொறுப்பாக மாட்டார். அதேவேளையில், பலன்களுக்கான பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டால், அம்மாதிரியான சூழ்நிலை உருவாகாது. இந்த அணுகுமுறைதான், ஆரம்பம் முதல் கடைசி வரை பாண்டவர்களைக் கிருஷ்ணர் காப்பாற்ற வழிவகுத்தது. இதற்குத் தேவை, இறைவன் மேல் எதிர்பார்ப்பு இல்லாத நம்பிக்கையே.

இறையின் பலனைப் புரிந்துகொள்ளுதல்

இறைவனிடம் பிரார்த்தித்து நடக்கவில்லையென்றால் அவர் மேல் கோபம் கொள்கிறோம். எதிர்பார்த்தபடி நடக்காமல் போனால் அதிருப்தி அடைகிறோம். இது அறியாமையை வெளிப்படுத்துகிறது.

இதற்கான கீழ்க்கண்ட உதாரணங்களைப் பார்ப்போம்.

காரணம் புரியாமல் இறைவனிடம் கோபம் கொள்வது 

ஒருவருக்கு வெளிநாட்டில் நல்ல வேலைக் கிடைத்ததை தனது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதி, வெளிநாடு செல்ல விமான நிலையம் கிளம்புகிறார். அப்பொழுது, எதிர்பாராதவிதமாக கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் சரியான நேரத்துக்கு விமான நிலையம் செல்ல முடியவில்லை. அடுத்த நாள் வேலையில் சேர்ந்தாக வேண்டும். இல்லையேல் வேலைப் போய்விடும். 5 நிமிட வித்தியாசத்தில் தன் எதிர்காலம் பறிபோனதாகக் கருதி கதறுகிறார்.

எனக்கு ஏன் இந்தச் சோதனை. பிரார்த்தனை செய்துவிட்டுத்தானே வந்தேன் என்று இறைவன் மேல் கோபம் கொண்டு, மன வருத்தத்தில் விமான நிலையத்தின் இருக்கையில் அமர்கிறார். சிறிது நேரத்தில், அங்கிருந்த தொலைக்காட்சியில் முக்கியச் செய்தியாக, தான் சென்றிருக்க வேண்டிய விமானம் விபத்துக்குள்ளாகி உயிர்ச்சேதம் என்ற செய்தியைக் காண்கிறார். அவரின் தற்போதைய மனநிலை என்ன?

நாம் எதிர்பார்க்கும் பலன்களின் முடிவை இறைவனிடமே விட்டுவிடுதல் 

ஒருமுறை, போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கிருஷ்ணரை எதிரே வந்த பாஞ்சாலி பார்க்கிறாள். கிருஷ்ணரின் கைவிரலில் ரத்தம் வடிந்துகொண்டிருந்ததைப் பார்த்து பதறிப்போய், தன் சேலையைக் கிழித்து கிருஷ்ணரின் விரலுக்குக் கட்டுப்போட்டு ரத்தம் வழிவதை நிறுத்துகிறாள். கிருஷ்ணர் நன்றி கலந்த பார்வையோடு சென்றுவிடுகிறார்.

பிறராக இருந்திருந்தால், தாம் செய்த உதவியைப் பெரிதென நினைத்து, கிருஷ்ணரிடம் பன்மடங்கு பலனை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், பாஞ்சாலி அப்படிச் செய்யவில்லை. காலம் நகன்றது.

துச்சாதனன் தன்னைத் துகில் உரியும்போது, தொடக்கத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள முயன்ற பாஞ்சாலி, பிறகு முடியாமல் போய் “கிருஷ்ணா காப்பாற்று” என்று கை தூக்கி சரணடைகிறாள். துச்சாதனன் செயலிழந்துபோகும் வரை, பாஞ்சாலியின் சேலை தொடர்ந்து வளரும்படி செய்து பாஞ்சாலியின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இது கிருஷ்ணரின் லீலை எனத் தோன்றும். ஆனால், உண்மை என்னவெனில், கை விரல் காயத்துக்குக் கட்டுப்போட்ட பாஞ்சாலியின் சேலைத் துணியே பன்மடங்காகப் பெருகி அவள் மானம் காத்தது.

“கடமையை மட்டும் செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் வாக்கியத்துக்கான விளக்கமே மேற்சொன்ன இரு உதாரணங்களும். கடமையை மட்டும் செய் என்பதற்கு முதல் உதாரணமும்; பலனை எதிர்பாராதே என்பதற்கு இரண்டாவது உதாரணமும் பொருந்தும்.

இறைவன் வழங்கிய பலனை வரையறைக்கு உட்பட்டு அனுபவிக்கும் முறை
இறைவனால் வழங்கப்பட்ட பலன்களின் நோக்கம் கருதி, இறைநெறிக்கு உட்பட்டு அனுபவித்தல் வேண்டும். இல்லையெனில், வரங்களும் சாபமாகும். பலன்களை முறையாக உணர்ந்து அனுபவிக்கும்போது, அதுவே நல்நிகழ்வுகளுக்குக் காரணமாகி, ஆன்ம பலத்தை அதிகரித்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறது.

எடுத்துக்காட்டாக, அப்பர் தனது ஆன்மிகப் பயணத்தில் மனிதர்களுக்கு நற்பலனைகளை வழங்கியதால், இறைவனே அகமகிழ்ந்து அவருக்குக் காட்சி கொடுத்தார். அதற்கான சோதனைகளாக, நிலத்தை உழும்போது நவரத்தினங்கள் வெளிப்பட்டதும்; ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றோர் அப்பரின் மனத்தை தடுமாறச் செய்ததும். ஆனால், அவர் மனம் இறை நிலையை விட்டு விலகாமல் இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த வரம்.

ஆன்மாவை தொடர்புப்படுத்துதல்

உடல், மனம் சார்ந்த அணுகுமுறைகளை மட்டும் வலுப்படுத்திக்கொண்டு, வழிபாடுகள், பரிகாரங்கள் போன்றவற்றைச் செயல்படுத்திப் பார்த்துக்கொண்டிருப்பதால், எதிர்பார்க்கும் நற்பலன்களைப் பெறமுடியாமலும், வாழ்வின் கடினங்களில் இருந்து விடுபடமுடியாமலும் தவிக்கிறோம்.

இதற்கு, ஆன்மாவை தொடர்புப்படுத்தித் தீர்வுகாண முடியாததே காரணம். மேலும், உடலும் மனமும் ஆன்மாவின் தன்மையைப் பொறுத்தே அமைவதால், துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ்வை சரி செய்துகொள்ள ஆன்மாவின் தன்மையை அறிந்து உணர்ந்து, அதற்கேற்ப உடல், மன ஒத்துழைப்புடன் செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டி உள்ளது.

உணர்தலில்தான் எதிர்கால வாழ்க்கை

பிறவிகளாக ஆன்மா கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதன் மூலமே ஆன்மாவின் தன்மையை உணர முடியும். உணர்தலே ஆன்மா பற்றிய அறிதலுக்கு முதல் படியாகும். உணர்தலில்தான் நம்முடைய எதிர்கால நல்வாழ்வுக்கான தீர்வு உள்ளது என்பதை ஆன்மிகமும் ஜோதிட சாஸ்திரமும் வலியுறுத்துகின்றன.

ஆன்மிக மார்க்கத்தில் இதன் செயல்பாடு என்பது, உடல் மற்றும் மனத்தைப் பலப்படுத்திக்கொண்டு, ஆன்மாவின் கடந்த கால தவறுகளை உணர்ந்து, அது தரும் கஷ்ட பலன்களை இறை நம்பிக்கையுடன் அனுபவித்துக் கழிப்பது என்ற வகையில் அமைகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் பயன் என்பது, உள்ளவாறே துன்பங்களை ஏற்று அனுபவிக்க வேண்டியதில்லை. துன்பங்களை எளிதாக்கி, அதிலிருந்து விடுபடச் செய்து நிறைவான வாழ்க்கைக்கு வழி செய்கிறது.

இன்று நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்தும் முற்பிறவிகளுடன் தொடர்புடையவை. ஆன்மாவின் பயணத்தில் எதிர்கொண்டிருக்கும் நிகழ்வுக்கான காரணங்களை (முற்பிறவிகளில்) பின்னோக்கிப் பார்த்தல் என்ற முறையில் ஆராய்ந்து, நிகழ்வுக்கான காரணிகள் கண்டறியப்படுவதன் மூலம், தற்கால நிகழ்வுகள் / காரணிகளில் மாற்றங்களைக் கொண்டுவர முடிகிறது. ஜோதிடம் என்ற உட்பிரிவை மையப்படுத்தி ஆராய்வதன் மூலம் மேற்சொன்னவை சாத்தியமாகிறது. நமக்கான முழுத் தீர்வையும் பெற முடிகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவான ப்ரச்னம் என்பது, உணர்தலையே மையப்படுத்துகிறது. உணர்தல் என்பது ஊழின் தன்மை, பலம் மற்றும் அதன் எல்லைகளைத் தெரிந்துகொள்வதிலேயே அமைகிறது.

(தொடர்ந்து பயணிப்போம்)

– ராஜேஸ் கன்னா

Previous Post
Next Post

Leave a comment