astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – தனுசு
2013/11/19

dhanusuதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் லாபம் மற்றும் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். மேலும் உங்களின் லாபஸ்தான ராசியில் சனி பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் ருண, ரோக சத்ரு ஸ்தானத்திலும் அதற்குப் பிறகு களத்ர, நட்பு ஸ்தானமான ஏழாம் ராசியில் ஆண்டு இறுதி வரையிலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு உங்களின் கடமைகளை பட்டியலிட்டு சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். முன் அனுபவம் இல்லாத விஷயங்களையும் தக்க முறையில் பூர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடி புகுவார்கள். அரசாங்கத்தில் அதிகாரம் தரும் பதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு எதிர்பார்த்த சம்பந்தம் அமைந்து திருமணம் கைகூடும்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் குரு பகவானின் சஞ்சாரத்தினால் உங்களின் செய்தொழிலில் இடைத் தரகர்கள் குறுக்கீடுகள் தோன்றும். உங்களின் தர்க்க ஞானத்தினால் எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். நேர்மையுடன் செயலாற்றுவீர்கள். குறுக்கு வழிகளை நம்ப மாட்டீர்கள். வீண் தம்பட்டமிடும் நண்பர்களை ஒதுக்கி வைப்பீர்கள். உங்களின் பழைய செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். உற்றார். உறவினர்களுக்கிடையே இருந்த பிரிவினை, பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பீர்கள். ஒரு பிரச்னையை பல கோணங்களில் ஆராய்வீர்கள். உயர்ந்தவர்களின் மனதில் “நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்’ என்று பெயரெடுப்பீர்கள். சிலர் வெளியூருக்குச் சென்று வசிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் முக்கிய தருணங்களில் அவசரப்படாமல், நிதானித்து செயல்பட்டால் சாதனைகளைச் செய்யலாம்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் குரு பகவான் உங்களின் ஏழாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் தாமதப்பட்டிருந்த திருமணம் கைகூடும். உயர்ந்த அந்தஸ்தில் சம்பந்தம் ஏற்படும். செய்தொழிலில் ஏற்பட்ட மறைமுக போட்டிகள் விலகும். உங்கள் தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள். சகோதர, சகோதரிகள் தங்களின் அன்பையும், ஆதரவையும் தருவார்கள். இல்லத்தில் நிம்மதி சூழும். குடும்பத்தினருடன் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். குறைகள் நிறைகளாகி பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். வழக்குகள் முற்றுப் பெறும். அதேநேரம் எவரிடமும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட வேண்டாம். யாருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு பிரச்னைகள் குறையும். வருமானம் சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். மற்றபடி எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படவும்.

வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ஆனாலும் கொடுக்கல், வாங்கலில் சம நிலையே உண்டாகும். எனவே கடன்களை உடனடியாக வசூலிக்க முயற்சி செய்வீர்கள். உங்களின் யுக்திகளை செயல்படுத்தும்போது பொறுமை தேவை. மற்றபடி கூட்டாளிகள் உங்கள் சொல் கேட்டு நடந்துகொள்வார்கள்.

விவசாயிகளுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். குத்தகைகளை நன்கு ஆலோசித்து எடுப்பீர்கள். ஆனாலும் விளைச்சல் சுமாராக இருக்கும். மற்றபடி பூச்சிகளால் விளைச்சலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும். அவர்களின் தேவைகளைத் தக்கபடி பூர்த்தி செய்யவும். கட்சிக்கு நலம் சேர்க்கும் பிரச்சாரங்களில் மட்டுமே ஈடுபடவும். மற்றபடி கட்சியின் புதிய கொள்கைகளைப் பிரபலப்படுத்துவீர்கள். கட்சியில் உங்கள் புகழும், செல்வாக்கும் உயரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வேண்டாம்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பேச்சை உற்றார், உறவினர்கள் கேட்டு நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். பொறுமையுடன் பதற்றப்படாமல் படிக்கவும். தற்போது நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் எதிர்காலத்திற்கு சிறப்பான அடித்தளமாக அமையும்.

பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

Previous Post
Next Post