astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – துலாம்
2013/11/19

thulamதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் ராசி மற்றும் களத்ர, நட்பு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசியின் சுக, பூர்வ, புண்ய, புத்திர ஸ்தானாதிபதியான சனி பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரை அஷ்டம ராசியிலும், அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் பாக்யஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு நீங்கள் நினைக்காத நல்ல விஷயங்களும் நடந்தேறும். செய்தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். லாபம் இரட்டிப்பாவதோடு புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் உழைப்புக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். கூட்டாளிகளால் வந்த முட்டுக்கட்டைகள் அகலும். அவர்களின் அவ மதிப்பும் குறையும். செய்தொழிலில் சிறப்பான இடத்தைப் பெறுவீர்கள் என்றாலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

மற்றபடி உங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த வழி காட்டுவீர்கள். அதிக ஆசைப்படாமல் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் யோசனைகள் அவ்வப்போது தலை தூக்கும். பொருளாதாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். அனுகூலச் சத்ருகள் அதாவது உங்களுக்கு நன்மை செய்வது போல் பழகி கஷ்டங்களைக் கொடுப்பவர்கள், தாங்களாகவே விலகி ஓடுவார்கள்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் குரு பகவானின் சஞ்சாரத்தினால் உங்கள் உடலில் சிறிது சோர்வு தெரியும். எதையும் மந்த நிலையிலேயே செய்ய வேண்டி வரும். எடுத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறாமல் சிறிது தடைகளுக்குப் பிறகே முடிவடையும். அதோடு மனதில் சிறிய கவலை இழையோடிக் கொண்டிருக்கும். இது காலப்போக்கில் சரியாகிவிடும். செய்தொழிலில் இருக்கும் நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் நடக்கும்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து தொட்டது துலங்கத் தொடங்கும். குரு பகவான் பாக்யஸ்தான சஞ்சாரத்தினால் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை நடத்திக்கொடுப்பார். ஆலய, தர்ம காரியங்களுக்கு நன்கொடை அளிப்பீர்கள். புனிதத் தல யாத்திரைகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராகத் தொடங்கும். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். குடும்பத்தில் எப்போதும் போலவே அமைதி தொடரும். உங்களின் அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும். நினைத்த சுபகாரியங்கள் நடப்பதற்தான அறிகுறிகள் தெரிய வரும். உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பதாக உணர்வீர்கள். பெற்றோர், சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள்.

அதேநேரம் தகுதி குறைவானவர்களின் நட்பினால் சிறிது குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். அதனால் எவரிடமும் அனாவசியப் பேச்சு வேண்டாம். மேலும் உங்கள் பெயரில் எவருக்கும் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் புதிய வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து இருப்பதால் உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனாலும் பயிர்களில் புழு, பூச்சிகளின் பாதிப்பு தெரிய வந்தால் உடனே பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்கவும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினர் இந்த ஆண்டில் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.

மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபடவும்.

Previous Post
Next Post