astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – கன்னி
2013/11/19

kanniகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் தனம், வாக்கு, குடும்பம், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான், உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்திலும் அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனி பகவானின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டில் குடும்பத்தில் மேன்மை உண்டாகும். முகத்தில் வசீகரம் ஏற்படும். நல்ல பேச்சாற்றல் உண்டாகும். இனிமையாகவும், சாதுர்யமாகவும் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். அரசியல் தொடர்பு ஆக்கம் தரும். சோம்பேறித் தனம் அகன்று சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

குடும்பஸ்தானம் சர ராசியாக அமைவதால் இந்த ஆண்டு சிலருக்கு நவீனமான வீடுகளுக்கு மாறி வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல முயல்பவர்கள் வெற்றியடைவார்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைவார்கள். உங்களைத் தவறாக நினைத்தவர்கள், இவர் எப்பொழுது வீழ்வார் என்று எதிர்பார்த்தவர்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்துநின்று சாதனைகள் செய்வீர்கள்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குரு பகவானின் அருளால் தெய்வீகக் காரியங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் தானாகவே கிடைக்கும். உங்களின் பேச்சை அனைவரும் கேட்பார்கள். மனத் தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சை மீறி நடந்த பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு அடிபணிவார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கும். பலருக்கும் உதவி செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வாழ்க்கை சலிப்பில்லாமல் நீரோடை போல் அமைதியாகச் செல்லும். பூர்வீகச் சொத்துக்கள் சுலபமாகக் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியத்துடன் கால் பதிப்பீர்கள். குடத்திற்குள் இட்ட விளக்காக செயலாற்றி வந்தவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெளியில் பிரகாசிக்கத் தொடங்குவார்கள்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவானின் அருளால் உங்கள் செய்தொழில் சூடுபிடிக்கத் தொடங்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினர்களும் நெருங்கி வருவார்கள். உடல் ஆரோக்யம் சீராகும். களவுபோன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு 2013ஆம் ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். மற்றபடி தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். அலுவலகத்தில் சகஜமான நிலை இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். ஆனாலும் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் ஓரளவு நன்றாகவே தொடரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வியாபார வட்டாரத்தில் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அதேநேரம் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவார்கள்.

விவசாயிகளுக்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். தரமான விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளாலும் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி முடியும். ஆனாலும் தொண்டர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி சமுதாயத்தில் பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பெயரும் புகழும் வளரும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.

கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைப் பெறும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆனாலும் அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மற்றபடி உங்களைக் குறைசொல்லும் சக கலைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமையில் பங்கம் ஏற்படாத வண்ணம் கவனமாக நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் சிறு பிரச்னைகள் ஏற்படலாம். பேசும்போது அவசரப்படாமல் நிதானமாகப் பேசவும். உற்றார், உறவினர்களை கௌரவமாக நடத்தவும். மற்றபடி பண வரவுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். செவ்வாய்க் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.

Previous Post
Next Post