astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – சிம்மம்
2013/11/19

simhamசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் தைரியம் மற்றும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் உங்களின் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு இந்த ஆண்டு மே மாதம் வரையில் தொழில் ஸ்தான ராசியிலும் அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் லாபஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார். ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் சிறப்பான உறவு தொடரும். கெட்டிக்காரர் என்று சுற்று வட்டாரத்தில் பெயரெடுப்பீர்கள்.

உங்களின் அனுபவ அறிவால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடன் சண்டை சச்சரவு வராமல் பார்த்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். இதனால் பழைய கடன்களை நல்லபடியாக திருப்பிச் செலுத்துவீர்கள். நவீன விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். பழைய தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். முடியாது என்று நினைத்திருந்த காரியங்களை சிறப்புடன் செய்யத் தொடங்குவீர்கள். மனித பலத்தைவிட தெய்வ பலத்தை நம்பி ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். வில்லங்க வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேண்டாத, விபரீத யோசனைகளிலிருந்து மனதை திசை திருப்பி செயல்படுவீர்கள்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் உங்களின் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்களின் செய்தொழிலில் சிறு பதற்றத்தை ஏற்படுத்துவார். அதனால் அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்து விடுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைத்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். சகோதர, சகோதரிகளிடம் சகஜகமாகப் பேசிப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தத் திட்டமிடுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மற்றபடி போட்டியாளர்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். ஏனெனில் அவர்களால் ஏமாற்றப்படலாம்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் குரு பகவான் செய்தொழிலில் இருந்த நெருக்கடிகளைக் குறைப்பார். அலைச்சல், திரிச்சல் ஏதுமின்றி சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். பழைய நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் லாபம் வரத் தொடங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புரியாத புதிராக இருந்தவர்கள் நேர்மையுடன் பழகத் தொடங்குவார்கள். எதிரிகளின் ரகசியங்களை அறிந்துகொள்வீர்கள். புதிய செல்வாக்கைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்புக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு புதிய பொறுப்புகள் தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால் உடலில் சிறிது சோர்வு ஏற்படும் என்பதால் சுறுசுறுப்பு குறையும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்து வந்த போட்டிகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நலம் தரும் திருப்பங்கள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். ஆனாலும் உழைப்புக்கேற்ற பலனை அடைவதில் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் முடிவைக் காண்பீர்கள். சமூகத்தில் புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப் பிறகு சிறப்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் கடமையை சரியாக நிறைவேற்றுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகளுக்கு இது லாபகரமான ஆண்டு. ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவருடன் ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: பைரவரை வழிபடவும்.

 

Previous Post
Next Post