astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்
2013/11/19

katakamகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் சுகம் மற்றும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் உங்கள் சுகஸ்தானமான அர்தாஷ்டம ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் லாபஸ்தான ராசியிலும் அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் அயனஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டில் மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் ஏற்படும். செக்கு மாடு போன்ற வாழ்க்கையிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனோ பலம் அதிகரிக்கும். உங்கள் செயல்களை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் மத்தியில் வளர்ச்சி அடைவீர்கள். அவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு சொத்து சுகங்களுக்கு அதிபதியாவீர்கள். வில்லங்கமான வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். அனைத்து காரியங்களிலும் தனித்து இயங்கி வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தாருடன் மனதிற்கினிய சுற்றுலாக்களுக்கு சென்று வருவீர்கள். சரியான காரணமில்லாமல் தாமதமாகி வந்த வீட்டுக்கடன் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆன்மிகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் மீது குற்றம் சாட்டிய நண்பர்கள் தங்கள் தவறை உணர்ந்து இன்முகத்துடன் பழகுவார்கள். சமுதாயத்தில் இழந்த மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் முயற்சியை அதிகரித்துக்கொண்டு உழைக்கும் திறமையைக் கொடுப்பார். செய்தொழிலில் நஷ்டங்கள் ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். உற்சாகத்துடன் உழைப்பதற்கு மனதிற்குப் பிடித்தமான வேலைகள் கிடைக்கும். சரளமான பண வரவைக் காண்பீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அதேநேரம் எவரிடமும் வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். மேலும் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை குரு பகவானின் கருணையினால் செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப் பிரிவினைகள் ஏற்படும். அதேநேரம் வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். மேலும் அவசியம் ஏற்பட்டாலொழிய நெடுந்தூரப் பயணங்களைச் செய்ய வேண்டாம். பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.

வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருந்தாலும் போட்டிகளை சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். கோபப்படும் தருணங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். மற்றபடி வெளிச் சந்தைகளை தேடிச் சென்று விற்பனையை விரிவு படுத்துவீர்கள்.

விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். கடன் பிரச்னைகள் திடீரென்று முளைத்தாலும் அதை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடம் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து முக்கியப் பணிகளைக் கொடுக்கும். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு துறையில் வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வ பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். பண வரவு இந்த ஆண்டு முழுவதும் சீராகவே இருக்கும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பாடங்களை மனப்பாடம் செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி பெற்றோரின்

ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும்.

Previous Post
Next Post