astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – ரிஷபம்
2013/11/19

rishabamரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது மற்றும் சனி பகவான்கள் உங்களின் ருண ரோக சத்ருஸ்தானம் மற்றும் அயன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மே மாதம் வரையில் உங்கள் ஜென்ம ராசியிலும் அதற்கு பிறகு ஆண்டு இறுதி வரையில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். ராகு, கேது மற்றும் சனியின் சஞ்சாரத்தினால் சுப காரியங்கள் எளிதில் நடந்தேறும்.

புதிய நண்பர்கள் உங்களை நாடி வந்து நட்பு கொள்வார்கள். உங்களுக்கு எதிர்கட்சியில் நின்று வாதிட்டவர்கள் உங்கள் பக்கம் சாயும் நேரமிது. அனைத்து விஷயங்களிலும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உண்மைகளை உறுதியாக எடுத்துரைப்பீர்கள். பிள்ளைகள் சில சாதனைகளைச் செய்து உங்களை பெருமிதப்படுத்துவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு திடீர் திருமண யோகம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகளும் விரக்திகளும் மறையும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். செல்வந்தர் என்கிற நிலைக்கு உயர்வீர்கள். பணம் தாராளமாகப் புரளும். புதிய பதவிகள் தேடி வரும். பதவிகள் வேண்டாம் என்று தள்ளினாலும் உங்களிடம் தானாகவே பதவி வந்து சேரும் காலகட்டம் இது.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குருவின் அருளால் செய்தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மிகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். சாந்தமாக செயல்பட்டு உங்களின் நல்ல குணத்தை வெளிப்படுத்துவீர்கள். இதனால் முக்கிய விவாதங்களில் உங்கள் சொல் அரங்கேறும். தெய்வ அருள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை இருக்காது. பிள்ளைகளால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதேநேரம் வீண் வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம். அனாவசிய சட்டச் சிக்கல்களிலிருந்தும் தள்ளி இருக்கவும். இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் புத்தியை கூர்மையாக்குவார். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள்வார்கள். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்னைகள் மறைந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பெரிய கடன் சுமைகள் ஏற்படாத வண்ணம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உயர்ந்தவர்கள் உங்களைத் தேடி வந்து ஆலோசனை வழங்குவார்கள். உங்களின் தர்ம சிந்தனைகள் மேலோங்கும். சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்வீர்கள். தந்தையின் தொழில் நல்ல முறையில் நடக்கும். அவருக்கும் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

மூத்த சகோதர சகோதரிகளுக்கு சிறிது இடர்பாடுகள் உண்டாகும். அதனால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கவும்.உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள் முனைப்புடன் வியாபாரம் செய்வீர்கள். லாப இலக்குகளை எட்டுவீர்கள். கூட்டாளிகளும், நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். மற்றபடி பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சிறிய அளவில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அதேநேரம் உங்கள் வருமானத்தை கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அதேநேரம் உங்கள் கட்சியினரிடமும், எதிர்கட்சியினரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனம் திருப்தி அடைவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களிடமிருந்து சிறுசிறு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரசிகர்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர சகோதரி உறவில் இருந்த விரிசல்கள் மறைந்து உறவு சீர்படும். உடல் உபாதைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

மாணவமணிகள் முதலிடத்தைப் பெறுவீர்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள். விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபடவும்.

Previous Post
Next Post