astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – மீனம்
2013/11/19

meenamமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் அஷ்டமம் மற்றும் தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். மேலும் உங்களின் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் விபரீத ராஜயோக பலத்துடன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் உங்களின் தைரியஸ்தான ராசியிலும், அதற்குப் பிறகு ஆண்டு முழுவதும் சுகஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். செயல் திறன் உயரும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்களின் ஞாபக சக்தி உங்களின் அனைத்துச் செயல்களுக்கும் ஒரு வரப் பிரசாதமாகவே அமையும். செய்தொழில் நன்றாக நடந்தாலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்திலும் எதிர்மறையான பேச்சுகள் உங்கள் காதுகளை எட்டும். அதனால் எவரிடமும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத வார்த்தைகளைக் கொட்டிவிட வேண்டாம்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் குரு பகவான் உங்களின் தைரியஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து முடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். மறைமுக எதிரிகளிடம் ஒரு கண் வைத்திருப்பீர்கள். உடல் ஆரோக்யம் நல்ல முறையிலேயே தொடரும். பெரிய மருத்துவச் செலவுகள் எதுவும் ஏற்படாது. பகைவர்களாக இருந்தவர்கள் தங்களின் முக்கிய விஷயங்களுக்காக உங்களின் உதவியை நாடி வருவார்கள். வருமானம் தடைபடாது. அவ்வப்போது ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சிறிய அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். இதனால் வாழ்க்கைச் சக்கரம் சீராகவே சுழலும்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் குருவின் சுகஸ்தான சஞ்சாரத்தினால் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பதில் கிடைக்கும். மனதில் இருந்த எதிர்மறையான சிந்தனைகள் மறையும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். துணிந்து செய்யும் காரியங்களில் பணிவுடன் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது. வருமானம் சீராக இருந்தாலும் பழைய சேமிப்புகளிலிருந்து சிறிது செலவு செய்ய நேரிடும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மற்றபடி உங்களை மிரள வைக்கும் சூழ்நிலை உண்டானாலும், உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களால் அவை தவிடுபொடியாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடினாலும் அவற்றை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். உங்களின் பொருளாதார நிலை உயரும். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் சில நன்மைகள் உண்டாகும்.

விவசாயிகள் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். சந்தையில் உங்களின் பொருட்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். போட்டியாளர்களுக்கு ஏற்ப விற்பனை முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். பால் வியாபாரம் செய்வோர் நல்ல பலனடைவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் சில இடையூறுகள் தோன்றினாலும் அதனால் உங்கள் கௌரவத்திற்குக் குறைவு ஏற்படாது. அதேசமயம் ரகசியமாக எதையும் செய்ய வேண்டாம். மற்றபடி தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து உங்களின் பெருமையைக் கூட்டிக் கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

மாணவமணிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். மற்றபடி உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

பரிகாரம்: திருவேங்கடவனை வழிபடவும்.

Previous Post