astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – கும்பம்
2013/11/19

kumbam

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் பாக்கியம் மற்றும் தைரியஸ்தான ராசிகளில் சஞ்சரிக்கிறார்கள். மேலும் உங்களின் பாக்யஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் உங்களின் சுகஸ்தான ராசியிலும் அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரை பூர்வ புண்ய புத்திர ஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார். ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்து உங்கள் புகழை உயர்த்திக் கொள்வீர்கள்.

பல்வேறு செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் பல்வேறு திறமைகள் வெளிப்படும். பன்முகத் திறமை கொண்டவராகத் திகழ்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வழியில் இருந்த தடைகள் விலகும். சுப நிகழ்ச்சிகளுக்காக குடும்பத்தாருடன் வெளியூருக்கு செல்வீர்கள். அதேநேரம் தந்தை வழி உறவுகளில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். அதோடு பொது நலக் காரியங்களில் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டாம். நல்ல வாய்ப்புகளைப் பெற பொறுமையாக இருக்கவும். மற்றபடி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் குரு பகவான் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த உதவி செய்வார். பழுதடைந்த வாகனங்கள் நல்ல முறையில் ஓடத் தொடங்கும். தாயின் வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுக நிலைமை ஏற்படும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்திற்கு பொலிவூட்டுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தனை செய்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவிய மன வேறுபாடுகள் மறையும். மற்றபடி எதிர்வரும் எந்த வாய்ப்பையும் தவிர்க்க வேண்டாம்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு ஆண்டு இறுதிக்குள் குரு பகவானின் அருளால் பண வருவாய் இரட்டிப்பாகும். தாமதமாக நடந்த காரியங்கள் துரிதமாக நடக்கும். பயணங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் அகன்று அமைதி நிறையும். ஆன்மிக, தர்ம காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். தியானம், ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து மன அமைதி பெறுவீர்கள். பிள்ளைகளால் குடும்ப கௌரவம் உயரும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சலுகைகளையும், உதவிகளையும் பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தெளிந்த மனத்துடன் செயலாக்குவீர்கள். உழைப்பிற்குத் தகுந்த பெருமை அடைவீர்கள். சுயமாக ஊக்கத்தைக் கூட்டிக்கொண்டு உழைப்பீர்கள். தீயோர்களால் தொல்லைகள் ஏற்படாது. பெரியோர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருப்பீர்கள். சோம்பலை அண்ட விடாது சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் பணியாற்றுவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொள்ளவும். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். விரைவாக விற்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்யவும். மற்றபடி செயல்படும் முறையை திருத்திக்கொண்டு பணியாற்றுவீர்கள்.

விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. விளை நிலங்களில் களை எடுப்பது போன்றவற்றில் சரியான நேரத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரியும் விவசாயக் கூலிகளுக்கு உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள். தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.

மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் கனவுகள் பலிக்கும். மற்றபடி விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபடவும். முடிந்தால் சுந்தர காண்டத்தைப் படித்து வரவும்.

Previous Post
Next Post