astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – மகரம்
2013/11/19

makaramமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் தொழில் மற்றும் சுகஸ்தான ராசிகளில் சஞ்சரிக்கிறார்கள். மேலும் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் பூர்வ புண்ய புத்திர ஸ்தானத்திலும் அதற்கு மேல் ஆண்டு முழுவதும் ருண, ரோக, சத்ருஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனியின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு உங்கள் செய்தொழிலில் நஷ்டம் மறைந்து லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களின் நெருக்கடிகள் மறைந்து தெளிவுடன் செயல்படத் தொடங்குவீர்கள். முரண்பாடான கொள்கைகளைக் கொண்ட நண்பர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும். “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே’ என்று நினைத்திருந்த விஷயங்கள் உங்கள் வாசல் தேடி வந்து உங்களை குதூகலப்படுத்தும். அரசாங்கத்தில் உங்கள் கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிக்கப்படும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் விருந்தோம்பலில் கலந்து கொள்வீர்கள். ஒரு குடும்பப் பிரச்னையில் உங்கள் மீது ஏற்பட்ட அவச்சொல் நீங்கும்.

இந்த ஆண்டு மே மாதம் வரை குருவின் கருணையினால் நண்பர்களையும், கூட்டாளிகளையும் அரவணைத்து நடந்துகொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் சாமர்த்தியமாக வேலை வாங்கி அவர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் பிரபலமடைவீர்கள். உயர்ந்தவர்களை சந்தித்து அவர்களின் மூலம் முக்கிய விஷயமொன்றுக்கு தீர்வு காண்பீர்கள். இதற்கு உங்களின் ஆத்ம நண்பர் துணை புரிவார். பணவருவாய் உயரக்காண்பீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு உயில் சாசனத்தால் சொத்துக்கள் கிடைக்கும். அதேநேரம் புதியவர்களுடன் பழகும்போது முன்னெச்சரிக்கை தேவை. அதோடு உங்களின் தனிப்பட்ட ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவானின் பேரருளால் கை நழுவிப்போன பழைய ஒப்பந்தங்களும், பொறுப்புகளும் மீண்டும் கை வந்து சேரும். வாராக் கடன்கள் வசூலாகும். சிறு விஷயங்களுக்குக்கூட முன் கோபப்பட்ட நீங்கள் அமைதியான சூழ்நிலைக்கு மாறுவீர்கள். தெய்வீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றபடி அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். எவரிடமும் வீண் விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். சட்டச் சிக்கல்களிலிருந்து தள்ளி இருக்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கும். பயணங்களாலும் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்போர் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். சிலர் வழக்குகளை சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும். கை நழுவிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கால்நடைகளுக்கு செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். அதேநேரம் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். வருமானம் திருப்தியாக இருப்பதால் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் தேவைகளைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக் கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபடவும்.

Previous Post
Next Post