astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் – மேஷம்
2013/11/19

mesham

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது மற்றும் சனி பகவான்கள் உங்கள் ஜன்ம ராசி மற்றும் களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மே மாதம் வரையில் உங்கள் இரண்டாம் ராசியான தனம், வாக்கு, குடும்ப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார். அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரையில் குரு பகவான் தைரியஸ்தானத்தில் சஞ்சரிக்கிரார்.

ராகு, கேது மற்றும் சனியின் சஞ்சாரத்தினால் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை ஏற்பட்ட சோதனைகளும் வேதனைகளும் மறையும். பகை பாராட்டிய உற்றார், உறவினர்கள் உங்களின் இல்லம் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் மீது பாசத்தைப் பொழிவார்கள். பாகப் பிரிவினை போன்ற விஷயங்களில் மனசாட்சியின்படி நடந்துகொள்வீர்கள்.

உங்களின் ஆன்மிக பலத்தால் மன நிறைவு அடைவீர்கள். கொள்கைப் பிடிப்புடன் செயலாற்றுவீர்கள். மிரட்டல்களுக்கு பயப்படாமல் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட உடற் பயிற்சிகளையும், ப்ராணாயாமம் போன்ற மனப் பயிற்சிகளையும் செய்வீர்கள். குடும்பத்தினருடன் திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் மற்றவர்களின் பேச்சின் உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குருவின் அருளால் பொருளாதார நிலையில் சிறப்பான அபிவிருத்திகள் ஏற்படும். உங்களின் செயல்களை முழுமையாகச் செய்து முடித்து சாதனையாளர் ஆவீர்கள். தெளிவுடன் பேசுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நெடுநாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வந்து சேரும். பெற்றோரிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆலய தர்மப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

ஜுன் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவானால் மனதில் சிறிது அமைதி குறையும். மற்றவர்களின் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்துவீர்கள். இளைய சகோதரர்களிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டு அவர்களின் அதிருப்திருக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் சிறிது தாமதப்படுத்துவீர்கள்.

மற்றபடி ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட்டு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சாமர்த்தியமாகப் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். பெரியோர்களுடன் சகவாசம் உண்டாகும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். அதனால் மேலதிகாரிகள் உங்களிடம் முக்கியமான வேலைகளை ஒப்படைப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவீர்கள். அதேநேரம் எப்போது என்னவாகுமோ என்கிற அனாவசியப் பதற்றம் இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து எதிர்பார்த்ததற்கும் மேலாக லாபத்தைக் காண்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். அதேநேரம் விவசாயத் தொழிலாளர்களை அதிகம் நம்ப வேண்டாம். சுய முயற்சிகளைக் கூட்டிக்கொண்டு உழைக்கவும். கால்நடைகளையும் கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து அதனால் சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கிவிடுவார்கள். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பிறரிடம் பேசும் நேரத்தில் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும், விருதுகளும் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். மற்றபடி உங்களின் எண்ணங்களுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டாம். அனாவசியச் செலவுகளையும் செய்ய வேண்டாம்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் சச்சரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவும். அனைவருடனும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.

மாணவமணிகள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அனாவசிய விஷயங்களுக்காக நண்பர்களுடன் சண்டை வேண்டாம். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபடவும்.

Next Post