astrology dinamani
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருடம் கைகொடுக்குமா?
2018/04/10

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருடம் கைகொடுக்குமா?

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்று தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் விரிவாக விளக்கியுள்ளார்.

அஷ்டமத்துச் சனியின் பாதிப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வருடம் அதன் பிடியிலிருந்து விடுபட்டதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஜென்ம ராசிக்கு குரு பார்வை இருப்பதால், வரும் கஷ்டங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனியென விலகும்.

சித்திரை மாதம், கலைஞர்களுக்கு ஒரு ஆதரவான மாதம். அவர்கள் திறமைகள் வெளிப்பட்டு மற்றவர்களால் மதிக்கப்படும். ராசி அதிபதியாகிய செவ்வாய் 9-ம் வீட்டில் சனியுடன் சேர்ந்து இருப்பதால், வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று விழைபவர்களுக்கு இது ஒரு ஆதரவான மாதம். அவர்கள் விருப்பம் நிறைவேறும் மாதம்.

வைகாசி மாதம், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய மாதம். ராசிக்கு 6-ம் அதிபதியாகிய புதன் இந்த ராசியில் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அதேபோல், ஐப்பசி மாதமும் இந்த ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அப்போது 6-ம் வீட்டுக்குரிய புதனின் நேர்பார்வை இந்த ராசிக்குக் கிடைக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் இந்த மாதங்களில் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நலம்.

வீடு கட்டவேண்டுமென்ற அவா எல்லோருக்கும் எழக்கூடியதே! எவ்வளவு முயன்றும் அது முடியாமல்போவது மிகுந்த மனத் தளர்ச்சியைக் கொடுக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஐப்பசி மாதம் முடிய, உங்களுக்கு வீடுகட்ட அனுகூலமான காலமாக இருப்பதால், அது சம்மந்தமான எண்ணம் உடையவர்கள் தங்கள் முயற்சியைத் தொடரலாம். உங்கள் முயற்சி பலிதமாகும்.

புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டிய காலமிது. உடல் காயங்கள் ஏற்படக்கூடிய காலமிது. கவனமாக இருப்பது நமக்கு நல்லது.

தனாதிபதியாகிய சுக்கிரன் வைகாசி, புரட்டாசி மாதங்களில் தன் சொந்த வீட்டிலேயே சஞ்சாரம் செய்கிறார். அதுவும் புரட்டாசி மாதத்தில் குருவுடன் சஞ்சாரம் செய்கிறார். அந்த மாதங்களில் திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் வருகிறது.

பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஆவணி, தை மாதங்கள் சற்று நெருக்கடியைக் கொடுக்கக்கூடியவை. மற்ற மாதங்கள் பொருளாதாரம் சரளமாகவே தென்படுகிறது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, ஆனி மாதத்தில் இடமாறுதல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். புரட்டாசி முதல் மார்கழி மாதம் உள்ள காலங்களில் உங்கள் தனித்தன்மை மற்றவர்களால் போற்றப்படும். அப்போது உங்கள் கௌரவமும் சுற்றம், மற்றும் நண்பர்கள் மத்தியில் உயரும்.

இந்த ஆண்டு ஆதாயம், விரயம் கணக்குப் பார்க்கும்போது, ஆதாயத்திவிட விரயமே அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே செலவு அதிகரிக்கும்.

Previous Post
Next Post

Leave a comment