astrology dinamani
மிதுன ராசியில் பிறந்தவர்களாக நீங்கள்? இதுதான் உங்கள் குணநலன்!
2018/05/09

மிதுன ராசியில் பிறந்தவர்களாக நீங்கள்? இதுதான் உங்கள் குணநலன்!

எதையும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவதில் நீங்கள் கெட்டிக்காரர்களாயிற்றே! அப்படியேதான் எண்ணத்தையும் சுவைப்பீர்கள். உங்களுடைய எண்ணத்தைக் கவையாகத் தொகுத்துச் சொல்லுவதில் வல்லவர்கள்.

மிதுனராசி நேயர்கள் பெரும்பாலும் அழகாக, கவர்ச்சியாக இருப்பார்கள். வாயு ராசியைச் சேர்ந்தது. புதனுக்குச் சொந்தவீடு இது. மிருகசிரீஷத்தின் 3,4 பாதங்கள், திருவாதிரை நான்கு பாதங்களும், புனர்பூசம் 1, 2,3-ம் பாதங்களும் இந்த ராசியைச் சேர்ந்தவை.

இந்த ராசியில் பிறந்தவர்கள் சிந்தனைப் பிரியர்கள் இவர்களை எளிதில் ஒரு தீர்மானத்துக்குக் கொண்டு வந்து விடலாம். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் இரண்டு பணிகளைக் கவனிப்பார்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களை சுலபமாக மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

சிந்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்களாதலால் எதையும் தீர்க்கமாக ஆலோசிப்பார்கள். அடிக்கடி மாற்றத்தையும் புதுப் பழக்கங்களையும் விரும்பினாலும் மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

எடுத்த வேலையை அரைகுறையாக விட்டுச் செல்வதில் இவர்களுக்கு ஒரு அலாதிக் குஷி இருக்கும். ஒரு வேலையைத் தொடங்கிச் செய்வார்கள். அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடுவர் அதையும் முடிக்க மாட்டார்கள்.

பிறருடன் சேர்ந்து பணியாற்றினால் இவர்களின் அறிவாற்றல் தெற்றெனப் பிரகாசிக்கும். தாங்கள் சொன்னதே சரியென்று சாதிக்கும் மனப்பான்மையையும், ஓரளவு தாராளக் குணமும் பெற்றிருப்பர். முற்போக்குச் சிந்தனை இருந்தாலும் பழமையை விட்டுவிடவும் தயங்குவர்.

இவர்களின் செய்கை, பேச்சு எல்லாவற்றிலுமே ஓர் இரட்டை வேஷம் போல் தெரியும். நெருங்கிப் பல நாட்கள் பழகினாலும் இவர்களைப் பிறரால் புரிந்து கொள்ள முடியாது. பல தொழில்களை இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடுவர். ஆனால் வெளியில் மனப்போராட்டத்தைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

இவர்களால் அதிகத் துயரத்தையோ பரபரப்பையோ தாங்க முடியாது. ஆனால் இவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டால் அபாரமாக உழைப்பர். முன்னுக்கும் வருவர். இவர்கள் பிரகாசிக்க ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இரண்டு தொழில்கள் வேண்டும். பிறர் சொல்வதைக் கேட்டுச் செய்வதைவிட தாங்களே சிந்தித்துச் செய்தால் சிறப்பாகச் செய்து முடிப்பர். இவர்கள் சிறந்த தூக்கப்பிரியர்கள்.

மிதுன ராசியின் சொந்தக்காரன் புதன் என்பதால் இவர்கள் சிறந்த கல்விமான்களாகவோ, பத்திரிகை ஆசிரியராகவோ, சுக்கிரனும் புதனும் நன்கு அமைந்திருந்தால் சினிமா போன்ற கலைத்துறையில் தலைசிறந்தோ விளங்குவர்.

புத்தகங்களை வேகமாகப் படிப்பர். பேச்சில் கண்ணியமும், நயமும் வெளிப்படும். ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக நுழைந்தாலும் குறுகிய காலத்தில் உயர் பதவிக்கு வந்துவிடுவர். சிறந்த புகைப்படக் கலைஞர்கள் மிதுனராசி அன்பர்களாக இருக்கலாம். பெண்களாக இருந்தால் நகத்தில் அழுக்குப்படியாமல் எப்போதும் சொகுசாக இருக்க விரும்புவர். நயமான பேச்சினாலேயே பிறரிடம் வேலைவாங்கி விடுவர்.

இந்த ராசியில் பிறந்தவர் வாயுராசிக்கார ஆண்களையோ நெருப்பு ராசிக்கார ஆண்களையோ மணக்கலாம். மிதுனம் காற்று (வாயு) ராசி என்பதால் இந்த ராசிக்கார்கர்கள் மனசும் ஓரிடத்தில் நிலைக்காமல் அலையும் சுபாவம் கொண்டது. அடிக்கடி புது இடங்களுக்குப் போய்ப் பார்க்க விரும்புவர். பெண்களின் சகவாசத்தினால் நல்லதையோ கெட்டதையோ அவசரப்பட்டுச் செய்து விடுவர்.

குடும்பத்தில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்காமல் சில சமயங்களில் பிரச்னையில் மாட்டிக்கொள்வர். தங்களுடைய மனோபலத்தில் அதிக நம்பிக்கை கொண்ட இவர்கள், கற்பனையில் தோன்றியதைச் செயலாக்க முனைந்து கடைசியில் தோல்வியுறுவார்கள். இளவயதிலும் சரி, மத்திய வயதிலும் சரி, பிற மாதர்களின் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அந்தத் தொடர்புகளால் பெருத்த தொந்தரவு ஏற்பட்டாலும் திருந்த மாட்டார்கள்.

சிறுநீரக தொடர்பான நோய் ஏற்பட்டு வருந்துவர். நரம்புத்தளர்ச்சியும், சுவாசகோசத் தொந்தரவும் சிலருக்கு ஏற்படலாம். இவர்களுக்கு மறைமுக எதிரி அல்ல, நேர்முக எதிரிகளே இருப்பார்கள்.

சொத்தையும் செல்வத்தையும் இந்த ராசிக்காரர்கள் எளிதில் சேர்த்துவிடுவார்கள். மிதுன ராசிக்காரர் எதிலும் இரட்டை வேஷதாரிகளாக இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றன.

Previous Post
Next Post

Leave a comment