astro_dinamani
மனதும், உடலும் ரிலாக்ஸ் ஆக வேண்டுமா? அப்போ இதை படிங்க!
2017/06/16

மனதும், உடலும் ரிலாக்ஸ் ஆக வேண்டுமா? அப்போ இதை படிங்க!

கண்களுக்கும், மூளைக்கும் ஓய்வில்லாமல் செய்யும் பணி எங்களது. அப்படி இருக்கும்பட்சத்தில் பணிபுரிபவர்கள் மனது சற்று “ரிலாக்ஸ்” படுத்த எங்கள் நிறுவனம் மனதை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகளை வாரம் ஒருமுறை என்று பத்து வகுப்புகள் நடத்தியது.

அதில், ஒரு வகுப்பில், அதி டென்ஷனாகவே வாழும் நம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்கு ஒரு புதிய யுக்தியைக் கற்றுக் கொடுத்தார்கள். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறி அதை செய்யச் சொன்னார்.

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொண்டு, உங்கள் வாயால் மெதுவாக மை ஐஸ் இஸ் ரிலாக்ஸ்! மை மைன்ட் இஸ் ரிலாக்ஸ்! மை ஹோல் பாடி இஸ் ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தச்சொன்னார். இவற்றைச் சொல்லி முடித்து விட்டு இப்போது கண்களை மெதுவாகத் திறங்கள். உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்க… என் முறை வந்தது. நான் சொன்னேன்…சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே! என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும் என்று கேட்டார்.

அதற்கு நான் சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயம் விடாமல் தியானிக்கும் பயிற்சியை ஆன்மிக ரீதியாக மிக அருமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசம் சொல்வதினால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாகக் கேட்டார்.

நானும் சொல்லத் துவங்கினேன். கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க‌!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!
கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம். இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்தப் பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும். மனோ வைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா!. அது போல் தான் இது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாகத் திகழ்கிறது. கவசத்தில் வரும் வரிகளில் “நவ கோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்” என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவ கோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவக் கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது, மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?. கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.

ஆனால் கவசம் படிப்பதன் மூலமாகத் தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கித் தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையைச் செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாகக் கூறினார்கள். இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன. ஆகவே இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும் என்று சொல்லி முடித்தார். இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் பிரமித்து போய் அகம் மகிழ்ந்து பாராட்டினார்.

பயிற்சி அளிக்க வந்த ஆங்கிலேயர் இதை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

Previous Post
Next Post

Leave a comment