astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : மேஷம்
2015/04/13

mesham

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வருமானம் உயரத் தொடங்கும். பழைய கடன்கள் அடையத் தொடங்கும். மனதில் இருந்த கவலைகள் மறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் செயல்களைத் திருப்தியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். உங்களின் முக்கியமான செயல்களுக்கு அடுத்தவர்களின் தயவை நாடமாட்டீர்கள். சரியான முடிவை எடுக்கத் திணறும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரைகளுடன் தேவையான உதவிகளையும் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலை உயரும். செல்வம் செல்வாக்கு இரண்டும் சீரிய நிலையில் இருக்கும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கை கொடுக்கும். பரமபத பாம்புபோல் அவ்வப்போது சரிவைச் சந்தித்தவர்கள் பரமபத ஏணியில் திடீரென்று ஏறி உயர்ந்த நிலையை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பெற்றோர்களாலும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆன்மிக விஷயங்களில் அதீத ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களிடம் நல்ல மதிப்பு வைப்பீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைந்து தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்படைவீர்கள். தோற்றத்தில் புதிய மிடுக்கு உண்டாகும். முகத்தில் பொலிவு கூடும். வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். உங்கள் பேச்சினால் மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை பேசுவீர்கள். குடும்பத்தாருடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே இருந்த பிணக்குகளை உங்களின் சமயோசித பேச்சுகளால் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் திரும்ப வந்து சேர்வார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயரக் காண்பீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் தேடிப் பெறுவீர்கள். நெடுநாளாகத் தீராமல் இருந்த வழக்குகளிலும் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும். மற்றபடி சோதனைகளைக் கடந்து சாதனையாளராக வலம் வரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் செய்கையால் சக ஊழியர்களிடம் நம்பகத் தன்மையை அதிகரித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைத்து பொருளாதார நிலை சீரடையும். வேலையில் தொடர்ந்து வந்த கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள். புதிய பொறுப்புகளையும் மேலதிகாரிகள் கொடுப்பார்கள். பதவி உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகள் அமோகமான விளைச்சளைக் காண்பார்கள். சக விவசாயிகள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் கட்சித் தலைமையின் வெறுப்பிலிருந்து தப்பிக்கலாம். தொண்டர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும். தோற்றத்தில் பொலிவு கூடும். மிடுக்கான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் வீட்டில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். கணவருடனான ஒற்றுமையும் சீராக இருக்கும். மாணவமணிகள் நண்பர்களிடம் கவனத்துடன் பழகவும். படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நெடுநாளைய கோரிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு நலன்களைக் கூட்டிக்கொள்ளுங்கள்.

Previous Post
Next Post