astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : மீனம்
2015/04/13

meenam(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் நேர்மறையாக சிந்திப்பீர்கள். குழந்தைகளால் நன்மைகள் உண்டாகும். அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்வார்கள். சிலர் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்கவைப்பீர்கள். வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களிடம் நெருங்கிப் பழக வருவார்கள். தெய்வ அருளால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்கிற நிலையில் காரியங்கள் தடைகளுக்குப்பிறகு இறுதியில் வெற்றி பெறும். மேலும் வெளியூர் பயணங்கள் செய்யும்போது சிறிய இடர்பாடுகள் தோன்றி மறையும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். நண்பர்களின் அனாவசிய சந்தேகங்களுக்கு உட்பட நேரிடலாம். மறைமுக எதிரிகளின் எதிர்ப்புகள் இருந்தாலும் தடைகளுக்குப்பிறகே வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். மனதில் முள்ளாய் உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். தேவைக்கேற்ப வருமானங்கள் வந்து கொண்டிருப்பதால் எந்தச் செலவையும் சமாளித்து விடுவீர்கள் என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களைத் துணைகொண்டு உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சிலர் புது வீட்டிற்குக் குடிபோவார்கள். புத்திசாலித்தனமாகப் பேசுவீர்கள். உடன்பிறந்தோர் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. வழக்குகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். சொன்ன சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். கனிவாகவும் கறாராகவும் பேசி காரியங்களைச் சரியாக முடிப்பீர்கள். உங்களை மதிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பழகுவீர்கள். மாற்றுக் கருத்துடையோரையும் உங்கள் பேச்சினால் வசீகரித்து விடுவீர்கள். தெய்வ நம்பிக்கையாலும் பிரார்த்தனைகளாலும் எண்ணங்கள் இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் சலிப்பின்றி உழைப்பீர்கள். உங்கள் திறமை ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் பணிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடிவடையும். கடையை சீரமைப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். அதிக முதலீடுகள் செய்து புதிய முதலீடுகளிலும் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகளிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்வரத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். தடையின்றி வருமானம் வரும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். உங்களின் திறமை அதிகரிக்கும். கரும்பு விவசாயிகள் சற்று கூடுதலான வருமானத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் இந்த ஆண்டில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவருவாய் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளை கட்சி மேலிடத்தை கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். கலைத் துறையினர் வேறு ஊர்களுக்குச் சென்று வளர்ச்சியடைவார்கள். பயணங்கள் செய்வதன் மூலமும் உங்கள் ஆற்றல் வெளிப்படும். வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சேமிப்புகள் கூடும் காலகட்டமிது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இணக்கமான உறவைக் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் கூடும். இல்லத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். மனதில் எண்ணுவதையெல்லாம் வெளியில் பேசவேண்டாம். மாணவமணிகள் இந்த ஆண்டு புதிய நல்ல நண்பர்களைப் பெறுவார்கள். அமைதியான தோற்றத்துடன் காட்சி அளிப்பீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post