astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : மிதுனம்
2015/04/13

mithunam

(மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெற்றோர் வழியில் சிறப்பான உறவுகள் தொடரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கஷ்டங்களை மறந்து புது நம்பிக்கையுடன் செயலாற்றத் தொடங்குவீர்கள். புதிய தொழில் முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலக்குவீர்கள். மனஅமைதியுடன் பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கும். அவ்வப்போது மன அழுத்தங்களுக்கு சிலர் ஆளாவார்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மேலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. உணவு விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் உத்தியோக விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் நடந்தேறும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அனைவரும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். மனதில் நெருடிக் கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வரமுடியாத அளவுக்கு மறைந்துவிடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் அறிவுரை வழங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உங்களது அவநம்பிக்கைகள் அகன்று தன்னம்பிக்கை கூடத்தொடங்கும். பொருளாதாரத்தில் முன்னேற புதிய வழிகளைத் தேடுவீர்கள். குறிப்பாக, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நெருங்கியவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் குளறுபடிகள் எதுவும் ஏற்படாது. ஊதியம் சரியாகவே வந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் கோபப்பட்டு எவரிடமும் பேசவேண்டாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். சேமிப்புகள் கூடும். பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிக வருமானம் வரும் வியாபாரத்திற்கு மாறுவார்கள். விவசாயிகள் இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதையும் பெற முடியாமல் போகும். விளைச்சலில் குறைவு இருக்காது. பழைய குத்தகைகளை முடித்துக் கொடுத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். இலக்கை நிர்ணயித்துக் கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டில் யோகபாக்கியங்கள் கூடும். புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவிகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல் புரிந்து பழகவும். இந்த ஆண்டு துறையில் புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள் என்றால் மிகையாகாது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் மதிப்பு அதிகரிக்கும். இருப்பினும் தாய்வழி உறவினரால் சிறு குழப்பங்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவமணிகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் ஈடுபடுவீர்கள். உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டுவர சிரமங்கள் குறையும்.

Previous Post