astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : மகரம்
2015/04/13

makaram

உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் இணைந்து வாழ்வீர்கள். பிரிந்திருந்த உற்றார் உறவினர்கள் கூடுவார்கள். குலதெய்வ அருளால் குடும்பத்தில் புத்திரப் பேறுகள் உண்டாகும். ஆன்மிகத்தில் தெளிவு உண்டாகும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்குத் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள். முன்பு பாதியில்விட்ட காரியங்களைத் தொடர்ந்து நடத்தி வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீர்படும். தக்க உடற்பயிற்சிகளையும் செய்வீர்கள். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிப்புகளைக் கூட்டிக்கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகளும் தேடி வரும் காலகட்டமாக இது அமைகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை சிரமப்பட்டு முடிப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயல்வீர்கள். எதிரிகளின் வகையில் அசட்டையாக இருந்தால் அவர்களால் சிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மனதில் இருந்த அச்சங்களை விரட்ட தியானம், பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். இதனால் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடுவீர்கள். உங்கள் பேச்சை குடும்பத்தினர் அங்கீகரிப்பார்கள். உங்களை ஒதுக்கியவர்கள் உங்கள் கண்ணில் படாமல் ஒதுங்கிவிடுவார்கள். முடியாது என்கிற வேலையே இல்லை என்கிற அளவுக்கு யுக்தியுடன் செயலாற்றுவீர்கள். உடல் நலனில் பாதகம் இல்லாவிட்டாலும் சிறிய வயிறு பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் உண்டாகலாம். இதனால் சிறிது மருத்துவச் செலவுகளும் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடுகள் அடைவீர்கள். அலுவலகத்தில் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டிருந்த மனுக்கள் பைசலாகி வீட்டுக்கடன் கிடைத்துவிடும். மேலதிகாரிகளின் வழிகாட்டுதலால் வேலைகளைச் சரியாகச் செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு சரிவுகள் என்பது இராது. வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிர்ப்புகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தனித்து சில முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கூட்டாளிகளும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். உங்களது திட்டங்களுக்கு உறுதுணையாக நின்று செயல்படுவார்கள் என்றால் மிகையாகாது. விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகி பணவரவு கூடும். தானியப் பொருள்கள் உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கால்நடைகளை வாங்கி பயன்பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் அதிர்ஷ்டகரமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சியில் உயர்ந்த பதவிக்கு மாறுவார்கள். சிறிய பரிசுத் தொகையும் கிடைக்கும். சுதந்திரமாகக் கட்சியில் பணியாற்றுவீர்கள். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும். சமூகத்தில் உங்கள் பெயர் புகழ் மரியாதை கூடும். கலைத் துறையினருக்கு சமூகத்தில் முக்கிய பதவிகள் கிடைக்கும். திறமைகேற்ப ஒப்பந்தங்கள் செய்வீர்கள். ரசிகர் மன்றங்களைச் சற்று கவனத்துடன் கையாளவும். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்மணிகள் தேவையற்ற விஷயங்களைத் தள்ளி வைத்துவிட்டு முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் உங்களது கௌரவம் ஓங்கும். கணவரிடம் அக்கறையுடன் நடந்துகொள்வீர்கள். சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவமணிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர் சொல்கேட்டு நடப்பீர்கள். விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொள்ளவும். நண்பர்களிடம் பார்த்துப் பழகவும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

Previous Post
Next Post