astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : துலாம்
2015/04/13

thulam(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் திடீர் சொத்துச் சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அலைந்து திரிந்து காரியங்களைச் செய்வீர்கள். வாய்ப்புகள் கைநழுவிப் போகாமல் பார்த்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் வருமானம் வரும். உங்கள் செயல்களை வேகமாகச் செய்தாலும் விவேகத்துடன் பணியாற்றுவீர்கள். எதிரிகள் தலைதூக்கினால் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே அமையும். மேலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் செய்வீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்கு கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் பணம் வாங்கியும் கொடுக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்ல எத்தனிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நீண்டகால திட்டங்கள் நிறைவேறக் காண்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். உங்களின் முயற்சியே உங்களின் ஆயுதம் என்று காரியமாற்றுவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். நூதன முயற்சிகளையும் செயல்படுத்துவீர்கள். மாற்றி யோசித்து செயல்களைச் செய்து சாதனைகளைப் புரிவீர்கள். குடும்பத்தினரிடையே இணக்கங்கள் கூடும். புதிய படைப்புகளைப் படைப்பீர்கள். புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு தக்க அறிவுறைகளையும் வழங்குவீர்கள். குழந்தைகளால் இருந்த பிரச்னைகள் மாறி சீரான நிலை உண்டாகும். உங்களின் தெய்வ பலம் அதிகரிக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். இந்த காலத்தில் உங்கள் மனதிலிருந்த பாரம் தீர்ந்து லேசானது போன்று உணர்வீர்கள். போதும் என்கிற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். பூர்வீகச் சொத்திலிருந்து வந்த வில்லங்கங்கள் மறையும். வழக்கு வியாக்யானங்களும் ஏற்படாது காக்கப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அனைத்து விஷயங்களிலும் உங்களை இறையருள் தொடரும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடம் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் புதுப்புது பிரச்னைகள் தோன்றினாலும் அவற்றை வெற்றிகொள்வீர்கள். அலுவலகச் சூழல் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கும் காலகட்டம் இது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலையை காண்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அதனால் மேலும் முதலீடுகள் செய்வதற்கான எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். கொள்முதலில் அதிக லாபத்தினை காண்பீர்கள். விவசாயத் தொழிலாளர்களும் உங்களின் மனமறிந்து நடப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளிடமும் கட்சித் தலைமையிடமும் கவனமாக இருக்கவும். கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். கலைத்துறையினர் சற்று கடினமாகவே உழைப்பார்கள். துறையில் நிபுணத்துவத்தை எட்டுவீர்கள். எந்தப் பிரச்னையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச்செல்வீர்கள். குடும்பத்தினருடன் மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக நடந்துகொள்ளுங்கள். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றங்களைக் காண்பீர்கள். பயிற்சிகளைச் சரியாகச் செய்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். கணினி பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உடல்நலம் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post