astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : தனுசு
2015/04/13

dhanusu

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்பாடுகளில் சிறு இடையூறுகள் குறுக்கிடக் காண்பீர்கள். இதனால், தாமதத்துக்குப் பிறகே வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைப்பை மேற்கொள்வீர்கள். ஒருமுறைக்கு இருமுறை பயணம் செய்தால்தான் உங்கள் காரியங்களைச் சரியாக முடிக்க முடியும். செய்யும் தொழிலை சீரமைப்பீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் குறையாது. சிறிய விஷயங்களுக்கும் கூட பெரிதாகக் கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. நோய்நொடிகளிலிருந்து விடுபடுவீர்கள். வண்டி வாகனங்களும் இருக்கும் வீட்டுக்கும் பராமரிப்புச் செலவுகள் செய்யவேண்டி வரும். கடன் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. அனைவரிடமும் வாக்குவாதம் செய்யாமல் சமாதானப்போக்கை கடைப்பிடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறைந்து சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். குடும்பத்திலும் உங்கள் மதிப்பு மரியாதையும் சீரடையும். வருமானம் உயரத் தொடங்கும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் திரும்பி வரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலமும் லாபத்தைக் காண்பீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியால் பூரிப்படைவீர்கள். இல்லத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும். உங்களின் பொதுத்தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வறியவர்களை தேடிச்சென்று உதவி செய்வீர்கள். அலைச்சல்கள் மறைந்து சரியான நேரத்தில் உணவெடுத்துக்கொள்வீர்கள். உங்கள் ஆன்மிக பலம் கூடும். புனிதத் தலங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலருக்கு புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் உண்டாகும். வேலை வேலை என்கிற நிலை மாறி அத்தியாவசிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் தொய்வில்லாமல் சிறப்பாகவே முடிவடையும். வாழ்க்கையில் தன்னிறைவை காணும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். தாற்காலிகமாக இருந்தவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள். வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் அதை இந்த ஆண்டு செய்வார்கள். அலுவலகப் பயணங்களால் உபரி வருமானங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடிவடையும். புதிய கடைகளைத் திறப்பீர்கள். கூட்டாளிகளும் இதற்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். வாக்குத்தவறி தொழில் வட்டாரத்தில் கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்ளவும். அகலக் காலும் வைக்க வேண்டாம். விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் செலுத்துவார்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வார்கள். வேலையாட்கள் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். பெரிய நஷ்டங்கள் எதுவும் உண்டாகாது. எதிர்பாராத பணவரவு உண்டாகும். வெளியில் கொடுத்திருந்த பணமும் திரும்ப கைவந்து சேரும். குடும்பச் சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகளைத் தேடி பதவிகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்துத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கௌரவத்தை நிலை நிறுத்திக்கொள்வீர்கள். கட்சி மேலிடத்திடம் பேசும்போது மட்டும் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவி சிறப்பாக இருக்கும். துறையில் உயர்ந்தவர்கள் உங்களைத் தூக்கிவிடுவர். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். திறமைகள் பளிச்சிடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post