astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்
2015/04/13

simham

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பலவிதங்களிலும் வருமானம் வரக்காண்பீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். உங்களை ஒதுக்கியவர்கள் வரவேற்பார்கள். தீராத உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு உண்டாகும். உடன்பிறந்தோரிடம் இருந்த வீண் விரோதங்கள் மறைந்துவிடும். செய்தொழிலை அபிவிருத்தி செய்ய பயணங்களை மேற்கொள்வீர்கள். சோம்பலுக்கு இடம் தராமல் கடினமாக உழைப்பீர்கள். நமக்கேன் வம்பு என்று ஒதுக்கிவைத்திருந்த விவகாரங்களையும் தூசித்தட்டி எடுத்து முடித்துவிடுவீர்கள். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்து சேரும். தீயோரின் சேர்க்கையை அறவே தவிர்க்கவும். பெற்றோருக்காகச் சிறிது மருத்துவச் செலவுகளும் செய்யவேண்டி வரும். அரசு விவகாரங்களிலும் அரசாங்க அதிகாரிகளிடமும் அதிகம் நெருக்கம் வேண்டாம். குடும்பத்தில் திடீரென்று சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை இல்லாமல் தவித்தோருக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில், பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். தேவையான பணம் கைவந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மெள்ள மெள்ள கூடும். உற்றார் உறவினர்களிடம் உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு கூடும். உங்கள் பணிகளைத் தடையின்றி நடத்தி முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும். முன்காலத்தில் இழந்த கௌரவம் மறுபடியும் கிடைக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு பிரபல யோகங்கள் உண்டாகும். மேலும் முன்காலத்தில் காணாமல் போயிருந்த பொருள்கள் அதிர்ஷ்டவசமாக திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தக்க உடற்பயிற்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற வருமானம் வராது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சக ஊழியர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். மேலதிகாரிகள் உங்களின் திறமையை பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகளை மறந்து சிறப்பான சூழ்நிலை நிலவக் காண்பீர்கள். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். தேவைக்கேற்ப சரக்குகளை மட்டுமே வாங்கி விற்பனை செய்வீர்கள். அநாவசியச் செலவுகளையும் தவிர்த்து விடுவீர்கள். நன்கு யோசித்த பிறகே புதிய முயற்சிகளில் ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய பயிர்களைப் பயிர் செய்வீர்கள். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய விளைநிலங்களை வாங்கி பராமரிப்பீர்கள். பூச்சிக்கொல்லி மருந்து
களையும் சரியான நேரத்தில் பயன்படுத்தி லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும். பயணங்கள் வருமானத்தைக் கொடுக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழத்தொடங்கும். அதை அனுபவிக்கவிடாமல் உங்கள் கட்சிக்காரர்களினாலேயே சில குறுக்கீடுகள் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை கச்சிதமாக முடிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். துறைரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சிலருக்கு விருது பெறும் யோகங்களும் உண்டாகும். சக கலைஞர்களிடமிருந்து சிறப்பான உதவிகளையும் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அவரிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இதுவரை தடைபட்டிருந்த சுப காரியங்கள் பூர்த்தியடையும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி வளர்ச்சியைக் காண்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உள்ளரங்கு விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post