astro_dinamani
ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் : கடகம்
2015/04/13

katakam(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் நீங்கள் சற்று கூடுதலாக முயற்சி செய்து இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உங்களுக்கு இடையூறு செய்தவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய அசையும் சொத்துகளை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் திருவிழா, விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளும் படிப்பில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். பழைய மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். வீட்டிலும் வெளிலும் பெயர், அந்தஸ்து கூடும். திடீரென்று ஒரு புதிய மனிதரால் சிறப்பான நன்மை உண்டாகும். மந்தமாக நடந்து வந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். ஆன்மிக தர்ம காரியங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வேறு ஊருக்குச் சென்று தொழில் புரியும் வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். சிலர் இருக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகள் செய்வீர்கள். உங்கள் செயல்களை குறுக்கு வழியில் செய்யாமல் நேர் வழியில் மட்டுமே செய்ய வேண்டிய காலகட்டமிது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் சுகசௌகரியங்கள் கூடும். அன்னை வழியில் நன்மைகள் கூடும். முரண்பாடாக நடந்து கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். கவலைகளை மறந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள். புதியவர்களை நம்பி எதையும் பேச வேண்டாம். மனதில் தெளிவு பிறக்கும். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கத் தொடங்கும். வேண்டா வெறுப்போடு பழகிக் கொண்டிருந்த ஓர் உறவினர் தானாகவே விலகி விடுவார். மறைமுக எதிர்ப்புகளும் விலகி ஓடும். புதிய தொழில் செய்ய வாய்ப்புகளும் தேடி வரும். தேவைக்கேற்ற வருமானம் கடைசி நேரத்திலாவது வந்து சேர்ந்து விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய யுக்திகளைப் புகுத்தும் எண்ணங்கள் தோன்றும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதனால் அவர்கள் போடும் உத்தரவுகளை சரியாகப் புரிந்து கொண்டு செயலாற்றவும். பணவரவு நன்றாகவே இருக்கும். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலையையே காண்பார்கள். கூட்டாளிகள் செய்யும் மறைமுகத் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்கவும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்காலக் கனவுகளும் திட்டங்களும் பலிக்க ரகசியமாகத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். போட்டியாளர்களின் சதியையும் உடனுக்குடன் அறிந்து கொண்டு தக்க மாற்று முயற்சிகளையும் செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சக உழைப்பாளிகளை அரவணைத்துச் செல்லவும். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கால்நடைகளால் சில செலவுகளும் உண்டாகும். எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்களின் வேலைகளை சரிவரச் செய்து முடிப்பார்கள். அனாவசிய பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். அதனால் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் செயல்படவும். உட்கட்சி பூசல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி பெறுவர். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களாலும் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் மூலம் சில வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும், வெளிவட்டாரத்தில் பழகும்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தோர் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவும் நன்றாக இருப்பதால் இடர்களைச் சமாளிப்பீர்கள். மாணவமணிகளுக்கு இது சாதகமான ஆண்டாகும். வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். இந்த ஆண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி கடுமையாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post