astro_dinamani
பிரதோஷ வேளையில் அபிஷேகங்களும், அதற்குரிய பலன்களும்
2017/08/05

பிரதோஷ வேளையில் அபிஷேகங்களும், அதற்குரிய பலன்களும்

இன்று சனிப்பிரதோஷம். மகேஷ்வரனை மனதார பூஜிக்க வேண்டிய நாள்.  இந்த நாளில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ… பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.

வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்
தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்
சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்
கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்
சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்
உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ வேளையில் அபிஷேகங்களும், அதற்குரிய பலன்களும்

பால் கொடுத்தால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் தந்தால் பல வளமும் உண்டாகும். தேன் கொடுத்தால் இனிமையான சாரீரம் கிட்டும். பழங்கள் கொடுத்தால் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தந்தால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

நெய் கொடுத்தால் முக்திப்பேறு கிட்டும். இளநீர் தந்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும். சர்க்கரை கொடுத்தால் எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் தந்தால் சுகவாழ்வு கிட்டும். சந்தனம் கொடுத்தால் சிறப்பான சக்திகள் பெறலாம். மலர்கள் தந்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.

Previous Post
Next Post

Leave a comment