astrology dinamani
தீபாவளியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை
2018/11/06

தீபாவளியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

தமிழகத்தில் தீபாவளி என்பது நரக-சதுர்தசி என்ற விதத்தில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களில், தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசை மற்றும் பிரதமை என்று மூன்று நாள்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இந்த நரக சதுர்தசியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமும் உண்டு. “தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா’ என்பர் பெரியோர். அதாவது இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணெயில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள். தீபாவளி தினத்தில், கங்கா ஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் மிகச் சிறப்பானவை.

சதுர்த்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை. இதனை வட இந்தியாவில் “ஸாத் பூஜா’ என்று பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாளில், இல்லத்தில் இருக்கும் ஆண்களின் நலனுக்காக பெண்கள் செய்யும் பூஜை இது. இந்நாளில்தான், தமிழகத்திலும், ஆந்திரம் போன்ற பகுதிகளிலும் கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மங்கையர், அன்னையை நோக்கி விரதம் இருந்து மாங்கல்ய பலத்துக்காக இதனைச் செய்கின்றனர். அதேபோல், அமாவாசை தினத்தில் மாலை நேரத்தில் லக்ஷ்மிகுபேர பூஜையைச் செய்கிறார்கள்.

சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான தேவதை குபேரனையும் வைத்து பூஜிப்பது சில இடங்களில் பரம்பரைப் பழக்கமாக உள்ளது. இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்பர். இந்த பூஜையைச் செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் மகாலக்ஷ்மியின் பார்வை பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்தத் திருநாளில் வடஇந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடங்குதல் இன்றும் நடைமுறையில் உள்ளது.

Previous Post
Next Post

Leave a comment