astrology dinamani
திகட்டாத இன்பம் அளிக்கும் திருமீயச்சூர் திருக்கோயில்
2015/02/02

திகட்டாத இன்பம் அளிக்கும் திருமீயச்சூர் திருக்கோயில்

சக்தி வழிபாட்டின் சிறப்பினைப் போற்றும் திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. அதில் ஒன்று திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பாள் உடனுறை அருள்மிகு மேகநாதசுவாமி திருக்கோயில்.

மயிலாடுதுறை – திருவாரூர் காலையில் பேரளம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. இறைவன் மேகநாதரும் அம்பாள் லலிதாம்பிகையும், திருமீயச்சூர் இளங்கோயிலில் சகல புவனேசுவரரும் இறைவி மேகலாம்பிகையும் எழுந்தருளி அருள்புரிகின்றனர்.

பாடல் பெற்ற தலம்:

திருஞானசம்பந்தர் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் இத்தலத்தைப் போற்றி பாடியுள்ளனர். பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 56ஆவது, 57ஆவது தலங்களாக இக்கோயில் விளங்குகிறது. வேளாக்குறிச்சி ஆதினத்தின் அருளாட்சியின் கீழ் திருமீயச்சூர் திருக்கோயில் சிறப்பாகப் போற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தர் பெருமான் தமது பதிகப்பாடல்களில் திருமீயச்சூர் இறைவனது சிறப்பையும், இத்தலத்தின் இயற்கை வளத்தையும் எடுத்துக் கூறுவதைக் காணலாம்.

“வேடமுடைய பெருமான் உறைமீயச்சூர்

நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன்

பாடலாய தமிழீரைந்து மொழிந்துள்கி

ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே”

(2-ம் திருமுறை)

திருமீயச்சூர் இளங்கோயில்:

இத்தலத்தின் மற்றொரு கோயிலான மீயச்சூர் இளங்கோயிலில் எழுந்தருளியுள்ள மேகலாம்பிகை உடனாகிய சகலபுவனேசுவரரை அப்பர் பெருமான் போற்றுகின்றார். ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே, சிந்தணை திருத்தும் திருமீயச்சூர், ஏதம் தீர்க்க நின்றார். இடுக்கள் தீர்க்க நின்றார் என்றும், பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் என்றும் போற்றுவதைக் காணலாம். “பஞ்சமந்திரம்” என்பது சிவபெருமானின் தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானியம் என்ற ஐந்து முகங்களிலிருந்து 28 ஆகமங்கள் தோன்றியச் சிறப்பினை தமது பாடலில் (36-வது பாடல்) அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார். மேலும் 6-வது பாடலில் இளங்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் ஒளிபொருந்திய மேகலை அணிந்த தேவியை விட்டு அகலாது வீற்றிருக்கும் திருமீயச்சூர் எனப் போற்றுகின்றார். இங்கே இறைவி மேகலாம்பிகை என அழைத்துப் போற்றப்படுகின்றார்.

கடுக்கண்டன் கயிலாலய மலை தனை

எடுக்கன் உற்ற இராவணன் ஈடற

விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்

இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே

(5 ஆம் திருமுறை)

திருக்கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் எதிரே சந்நதி வீதியில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். கோயில் வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோபுரத்தை அடுத்து வலப்புறம் தெற்கு நோக்கி லலிதாம்பிகை சந்நதி அமைந்துள்ளது. இதற்கு அடுத்துள்ள கோபுரம் 3 நிலைகளை உடையது. அடுத்து நந்தி, பலிபீடம் காணப்படுகிறது.

கருவறையில் மேகநாதசுவாமி லிங்கவடிவிலே எழுந்தருளி அருள்புரிகின்றார். திருச்சுற்றில் விநாயகர் சந்நிதி, நாகலிங்கங்கள், சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள், சுப்ரமணியர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர் சந்நதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. சித்திரை மாதம் 21 முதல் 27 வரை சூரியன் மேநாத சுவாமியை தனது ஒளிக் கதிர்களால் வழிபடுவதைக் காணலாம்.

சேத்ரபராணேசுவரர்:

Puraneswararஇறைவன் எழுந்தருளியுள்ள கருவறை யானையின் பின்பகுதியைப் போல வளைந்து கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது சிறப்பானது. கருவறை தேவகோட்டச் சிற்பங்களில் தெற்கு தேவகோட்டத்தில் உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். இம்மூர்த்தியின் வடிவம் மிகச்சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என அழைக்கின்றனர். இவ்வடிவத்தில் அம்பாளில் முகத்தில் வலது புறம் கோபமாகவும், இடது புறம் பார்த்தால் புன்னகைத் தழுவ காட்சி அளிப்பதைக் காணலாம். சிற்பக் கலையின் மிகச்சிறந்த கலைப்படைப்பு! உலகில் கணவன் – மனைவி இருவருக்கும் உள்ள இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இம்மூர்த்தம் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு!

கிளி ஏந்திய துர்க்கை:

கருவறையின் வடக்கு தேவகோட்டத்தில் அழகே உருவமாக துர்க்கை வடிவினைக் கண்டு வணங்கலாம். துர்க்கையின் கரத்தில் கிளி காணப்படுவது சிறப்பு. இக்கோயிலின் விமானத்தில் பச்சைக்கிளிகள் அமர்ந்திருப்பதைக் காணலாம். துர்க்கையிடம் நம் துன்பங்களை எடுத்துச் சொன்னால் கிளிகள் பறந்து போய் லலிதாம்பிகையிடம் எடுத்துக்கூறி தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

சதுர்முக சண்டிகேசுவரர்:

திருச்சுற்றில் அப்பர் பெருமான் போற்றிய இளங்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ மகாலட்சுமி இங்கு இறைவனைப் போற்றி வணங்கியதாக தலவரலாறு கூறுகிறது. கல்வி, கேள்வி, கலைகளில் சிறந்து விளங்க அருள்புரியும் ஸ்ரீ மின்னும் மேகலையாள் அம்பாள் சந்நதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் நான்குமுகம் கொண்ட சதுர்முக சண்டிகேசுவரர் மூர்த்தம் வழிபடப் பெறுவது சிறப்பாகும்.

புராண சிறப்புகள்:

காஸ்யப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகியோருக்கு கருடனும், அருணனும் பிறந்த தலம் என்று புராண வரலாறு கூறுகிறது. மேலும் சூரியனுக்கு சாப விமோசனம் பெற்றதையும், எமதர்மராஜன் தனது ஆயுளை நீட்டித்துக் கொள்ள ஸ்ரீமேகநாத சுவாமியை உச்சி கால வேளையில் வழிபடுவதாகவும் தலவரலாறு கூறுகிறது, இத்தலத்தில் ஆயுசு ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் ஆகியவை நடத்திக்கொள்ள மிகவும் உகந்த தலமாகவும் விளங்குகிறது.

கல்வெட்டுச் செய்திகள்:

திருமீயச்சூர் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது. சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்திய 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இங்கு எழுந்தருளி அருள்புரியும் இறைவனை திருமீயச்சூர் மூலஸ்தானமுடைய மகாதேவர், திருமிகைச்சூர் மூலஸ்தானமுடைய மகாதேவர், திருமீயச்சூருடைய மகாதேவர், திருமீகைச்சூருடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகளில் காணலாம். அம்பர் நாட்டு தேவதானமான மீயச்சூர் என்ற நாட்டுப்பிரிவில் இத்தலம் வருகிறது. பாண்டிய மன்னன் சடையவர்மண் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயில் திருக்காம கோட்டமுடைய சிவகாம சுந்தரி நாச்சியார் வழிபாட்டிற்காக பலவிதமான வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாய் அளிக்கப்பட்டதை அறிய முடிகிறது. திமிலை போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தானம் அளிக்கப்பட்டதை கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம்.

ஸ்ரீலலிதாம்பிகை:

Pushpangiதிருமீயச்சூர் திருக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் லலிதாம்பிகை அம்மன் அனைத்து சக்தி பீடங்களுக்கும் ஆதியாய் விளங்கி, ஆதிபராசக்தியாய் தோன்றி தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கி அணுக்கிரகம் செய்கிறாள். நாம் வேண்டுவன எல்லாம் தவறாமல் தந்தருளுகிறாள் அன்னை! அனைவராலும் நாள்தோறும் பாராயணம் செய்யப்படக்கூடிய ‘லலிதா சகஸ்ரநாமம்’ உருவான தலம் இதுதான்!

நான்கு வேதங்களுக்கும் இணையானது லலிதா சகஸ்ரநாமம். இத்தலத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் இரு கரங்களுடன் அமர்ந்து அருளாட்சி செய்யும் அற்புத தலம்! ஸ்ரீ ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசித்தார். அகத்தியர் இத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்டு, ஸ்ரீ “லலிதா நவரத்தின மாலை” பாடல்களை அருளியுள்ளார். இதனை நாள்தோறும் பாராயணம் செய்ய சகல செல்வமும் நற்பலனும் கிடைக்கும். 1999ஆம் ஆண்டு தமது பக்தை ஒருவரிடமிருந்து தனது காலில் கொலுசு அணிந்து கொள்ள கேட்ட சம்பவம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

ஸ்ரீ லலிதாம்பிகை சர்வ அலங்காரத்துடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களை தன் கருணையான பார்வையால் போக்குவது நிதர்சனம்!

வேளாக்குறிச்சி ஆதின அருளாட்சிக்குட்பட்ட இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமீயச்சூர் திருக்கோயிலுக்கு வருகிற பிப்ரவரி 8ம் தேதியன்று காலை 9.15 மணிக்கு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் பிப் 4ம் தேதி தொடர்கிறது. இந்நன்னாளில் நாமும் பங்கு பெற்று லலிதாம்பிகையின் அருள் பெறுவோம்!

படங்கள் உதவி : லால்குடி வேதநாராயணன்

ஆலயத் தொடர்பிற்கு – 9444836526

– கி.ஸ்ரீதரன் батарея отопления ценапосольство польши в харькове официальный сайтканадские каркасные дома проектыкаркасный дом от производителязаказать создание одностраничного сайта недорого в москве

Previous Post
Next Post

Leave a comment