astrology dinamani
‘தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கு மூலகாரணம் தண்ணீர்’ – ஜோதிட சாஸ்திரம் கூறும் வியப்பளிக்கும் தகவல்
2018/05/30

‘தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கு மூலகாரணம் தண்ணீர்’ – ஜோதிட சாஸ்திரம் கூறும் வியப்பளிக்கும் தகவல்

தமிழகத்தில் அரசியல் சார்ந்தும் அரசு சாராமலும் நடைபெற்று வரும் பல பிரச்னைகளைக் கவனித்துப் பார்த்தோமேயானால், தண்ணீர் மற்றும் தண்ணீர் சார்ந்த விஷயங்களே மிக முக்கியக் காரணங்களாக இருப்பது புரியும்.

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், தனி நபர் வருமான இழப்புகள், விரயமாகும் மனித நேரங்கள், அசௌகரியங்கள் மிக அதிகம்.

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள (காவிரி, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு…) தண்ணீர் சார்ந்த பிரச்னைகளை தமிழ்நாடு மாநிலத்துக்கானது மட்டும் என்று பார்ப்பது தவறு. இந்த நாடு எதிர்கொள்ளப்போகும் மாபெரும் ஆபத்துக்கான நிமித்தமாகத்தான் இதனைப் பார்க்கவேண்டி இருக்கிறது.

இந்த மாதிரியான அசாதாரண நிலைகளில், மனிதர்களுக்கு மட்டுமன்றி நாட்டு நலன் சார்ந்த விஷயங்களுக்கும் வழிகாட்டுவதற்காகவும், பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் சிறப்புகளை சரியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஜோதிட சாஸ்திரத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் எந்தப் பிரச்னையையும் தீர்க்கமுடியும். ஆனால், அதன் விளைவுகள் சாதகமாகவோ அமைவதோ அல்லது பாதகமாக அமைவதோ, அந்தப் பிரச்னைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

பொதுவாக ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களுக்கும், நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீர் மட்டுமே மற்ற நான்கு பூதங்களின் தன்மைகளையும் உள்ளடக்கி இருப்பதாலும், உலகிலும் மனித உடலிலும் நான்கில் மூன்று பங்கு நீர் நிறைந்துள்ளதாலும், நீர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இன்று நீரானது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக மாறி நாட்டை பலவீனப்படுத்தும் காரணியாக மாறி வருகிறது. தமிழகத்தில் நடக்கும் விஷயங்களும் அதற்கான அறிகுறிகளே எனும்போது, இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் தீர்வு உண்டா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் எழுவது இயல்புதானே.

நீருக்கான கிரகங்களான சந்திரன் மற்றும் சுக்கிரன் இரண்டும் அமைப்புரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், நாட்டுக்கானாலும் சரி, தனி மனிதனுக்கானாலும் சரி, நீர் சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி வரும். இது பொதுவானது. இது, எனது ஜோதிட அறிவும் அனுபவமும் சார்ந்த உண்மை.

சமுதாய நலன் சார்ந்து, இதற்குத் தீர்வாக நீர் தொடர்பான யாகங்கள், பரிகாரங்கள், பிரார்த்தனைகள் செய்வது சிறந்த பலனைத் தரும் என நம்புகிறோம். தனி மனிதன் சார்ந்து பிரச்னைகளைக் கையாளும்போது, எவ்வாறு செயல்படுகிறோம் என்பதுதான் அணுகுமுறையில் முக்கியமாகிறது. இங்கு தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளையும், குறிப்பாக ஜாதக ரீதியில் தண்ணீரால் பிரச்னை உள்ளவர்களையும் இணைத்துப் பார்த்து, உணர்வுரீதியில் பிரச்னைக்கான தீர்வுகளை அடையாளப்படுத்த முற்படும்போது, தீர்வுகள் எளிதில் சாத்தியமாகின்றன என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

எந்தப் பிரச்னைக்கும் நாம் பொதுவாக மேற்கொள்ளும் அணுகுமுறை என்பது மேலோட்டமாகவே இருப்பதாலேயே, பெரும்பாலும் தீர்வுகள் கிடைப்பதில்லை. பொதுவாக, தீர்வுகளுக்காகப் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் வழி, ஜாதக ரீதியிலான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்தான். இது ஒரு சடங்காகத்தான் பார்க்கப்படுகிறது. மேலும், பசுமாட்டை மட்டும் தேடிப் பார்த்து தண்ணீர் வைப்பது, உணவளிப்பது, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அகத்திக் கீரை வழங்குவது மற்றும் சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்குவது என்பது போன்ற செயல்களில் உணர்தலின் அளவு என்ன? அல்லது பயன்பாடு அல்லது பயனாளிகளின் அளவு என்ன? என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம்.

அதே சமயம், நீர்க் கிரகங்களின் பாதிப்பு உள்ளவர்கள், மேற்சொன்ன முறைகளை விடுத்து, தண்ணீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் செய்யும் உதவிகளாக நீர் நிலைகளைச் சீரமைத்தல், உருவாக்குதல் போன்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்போது, அது பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி, உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, மிகச்சிறந்த நற்பலன்களைத் தர வாய்ப்புகள் அதிகம். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

உதாரணமாக, ஒரு ஊரில் குளம் ஒன்றைச் சீரமைத்து அதில் மழைநீர் சிறப்பாகத் தேங்குவதற்கு தாங்கள் பணஉதவி வழங்கி இருக்கின்றீர்கள் என வைத்துக்கொண்டால், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள் என ஆயிரக்கணக்கான உயிர்கள் வாழ வழி ஏற்படுகின்றது. அந்த நீர், பல விவசாயிகள் விவசாயம் செய்து அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் வழி செய்யும். கால்நடைகளுக்கான தீவனங்கள் உற்பத்திக்கும் உதவும். இந்தச் செயல் ஆண்டுக்கணக்கில் தொடரவும் வாய்ப்புண்டு எனும்போது, பொதுவான பரிகாரங்களைத் தாண்டி இதுபோன்ற செயல்முறைகளாலேயே இறைவன் திருப்தி அடைந்து, நமக்கான கடுமையான தோஷங்களும் நிவர்த்திப் பெற்று நமக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும்.

நாம் சாதி, மொழி, இனம், மதங்களால் வேறுபட்டுள்ளோம். ஜோதிடம் ஒரு முழுமையான விஞ்ஞானமாக இருக்கும்பொழுது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படும் பயனுள்ள விஷயங்களாலேயே தீர்வுகள் சாத்தியமாகின்றன.

இன்று, நாட்டின் நீர்வளங்களைச் சீரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் என்பது நாட்டின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி, தனிப்பட்ட மக்களின் வாழ்வும் அடங்கியுள்ளதால், இதுபோன்ற விஷயங்களில் பயனுள்ள செயல்பாடுகளே நம் வாழ்வை மேம்படுத்தும் நமக்கான பரிகாரங்களாகும்.

இது செயல்படும் காலம். முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.

– வாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா

தொடர்புக்கு – rajeshkanna.astro@gmail.com

Previous Post

Leave a comment