astrology dinamani
ஜோதிட ரீதியாக நாம் சரியான உணவை உண்கிறோமா?
2018/12/28

ஜோதிட ரீதியாக நாம் சரியான உணவை உண்கிறோமா?

ஊட்டச்சத்துள்ள மற்றும் சுண்ணாம்பு சத்துள்ள உணவுகளைக் குறைத்து, அதிக அளவில் குப்பை உணவுகளை (JUNK FOOD) எடுத்துக் கொள்பவரா நீங்கள், அப்படியானால் உங்களுடைய ஜாதகத்தில், சூரியன் பலமிழந்து எதிர்மறை செயல்பாட்டில் காணப்படுகிறார் என அறியவும். அதுவே, நிறைய ஊட்டச்சத்துள்ள உணவுகளை  ஒருவர் உண்கிறார் எனில், அவருக்கு சூரியன் பலம் பொருந்தி உள்ளது எனவும், அவர் அதிக தன்னம்பிக்கை உடையவராகவும், அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தி இயற்கையிலேயே கொண்டிருப்பார் எனவும் கூறலாம்.

இதே ஒருவர், அதிக அளவில் கருப்பு உளுந்தால் செய்த பண்டங்களையும், கசப்பு சுவை உணவுகளையும் உட்கொள்கிறார் எனில் அவருக்கு, சனி பலமிழந்து எதிர்மறை செயல்பாட்டில் உள்ளது என அறியலாம். மேலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ள மாட்டார்கள் எனக் கூறலாம். குறிப்பாகப் பின் இரவு நேரத்தில் கூட உணவு உண்பார்கள். அதோடு மட்டும் அல்லாமல், வயிற்றின் கொள்ளளவுக்கு மேல் உண்டும், உண்டபின் உடனே படுத்துறங்கவும் செய்வர். அவர்கள் டீ மற்றும் காபி பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வார்.

நல்ல பலம் பொருந்திய செவ்வாயை கொண்டவர்கள், நிச்சயம் அவர்களை சைவ உணவை நோக்கி அழைத்துச் செல்லும், வாழ்வில் வெற்றியைத் தவற விட்டும் / தோல்வியுறும் காலங்களில் நிறைய பேர்கள் சத்துள்ள, எளிமையான, சைவ உணவை நோக்கிச் செல்வதால் அவர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைவதையும், வெற்றி பெறுவதையும் செவ்வாயால், காண முடிகிறது.

எப்போதெல்லாம், செவ்வாய் எதிர்மறை கொண்டு பலம் இழந்து செயல்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒருவரை, அதிக மாமிசம் அருந்தவும் / மாமிசம் உண்ணும் அதிக விருப்பத்தையும் தரும். அதனால், அவர்களுக்கு, மண்ணீரல், கல்லீரல், சிறுநீரக பிரச்னைக்கு ஆளாவதையும் காணமுடிகிறது. மேலும், எதிர்மறை கொண்ட செவ்வாய் கொண்டவர்கள், யாராவது விருந்துக்கு அழைக்கும் பட்சத்தில், மாமிச உணவு இல்லாத இடங்களுக்கு செல்லவும் மறுத்துவிடுவார்கள்.

திடீரென நிறைய இனிப்பு வகை உணவுகளை ஒருவர் உண்ண விரும்புவதும் நல்ல அறிகுறி இல்லை. அப்போது சுக்கிரன் அவருக்கு, எதிர்மறைக்கு திரும்பி விட்டார் எனக் கொள்வதோடு, எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்.

ஒருவர் உடலில் சனியின் உறுப்புகள் பாதிப்படையும் போது, அவர்களுக்கு, நரம்பு தொல்லைகள் வரலாம். யாரொருவர், அதிக வாயு பண்டங்களை உண்கிறாரோ, அவர்களுக்கு, நிச்சயம் நரம்பு தொடர்பான நோய்கள் தாக்கக்கூடும். அதனையே பழங்காலத்தில் முதியோர்களும், அனுபவசாலிகளும், வாயு முத்தினால் வாதம், வாதம் முத்தினால் வைகுந்தம் என்று எச்சரிக்கைப்படுத்தி கூறுவார்கள்.

எப்போதெல்லாம் தசா, புத்தி, கோள்சாரம் மாற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒருவரின் உணவு பழக்க வழக்கங்கள் மாறுவது தடுக்க முடியாத ஒன்றே ஆகும். இதனை ஜோதிடம் மூலம் அறிந்து அவற்றின் செயலை மாற்றும் போது உடலுக்கு தீங்கும், நோய் தாக்கத்தின் அளவையும் குறைக்க முடியும்.

உணவு உண்ணும் பாணியும் அவர்களின் ஆளுமையும்

நாளை எதுவுமே கிடைக்காது எனும் நோக்கத்தில் அதிக உணவை உட்கொள்ளும் நபர்கள், குறைந்த சக்தியையும், அரசியலில் தாக்கமும், சதித் திட்டங்களில் ஈடுபாடும் கொண்டவர்களாய் இருப்பர்.

ஒவ்வொரு தானியங்களாக பொருக்கி யாரொருவர் வாயில் இட்டு உண்கிறார்களோ, அவர்களுக்கு, சாதாரணமாகவே ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்னை இருப்பது உறுதி.

யாரொருவர், உண்ணும் உணவில் குற்றம் குறை காண்கிறார்களோ, அவர்களுக்கு ஏதேனும் ஒரு நோய் இருப்பதற்கான அறிகுறி ஆகும். .

எவரொருவர், வெகு வேகமாக உணவு உண்கிறார்களோ, அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை (ANXIETY) அதிகமாகும். மேலும் அவர்களின் இதயம் சாதாரண வேகத்தைக் காட்டிலும் அதிவேகமாகப் படபடக்கும் / துடிக்கும். .

உணவை எவரொருவர், உண்ணும்போது அதிக சப்தத்துடன், உண்ணுகிறார்களோ அவர்களின் அதிர்ஷ்டத்தை அவர்களே குறைப்பதுடன், அவர்களின் ஆளுமை (PERSONALITY) தன்மையையும் குறைக்கிறார்கள். அதோடு, அவர்களுக்கு, ரத்த சம்பந்தமான, தோல் சம்பந்தமான நோய்கள் வர காரணமாயும், வலு இழந்த இதயத்துடனும் இருக்கிறார்கள் எனக் கொள்ளவேண்டும்.

உணவு எவ்வாறு செய்யப்பட்டது, உணவில் என்னென்ன உள்ளது என விமர்சிக்க (CRITICIZE) தக்கவர்களுக்கு வயிற்றில் கோளாறு உள்ளது என அறியலாம். எவர், தனது தட்டில் உண்ணும் உணவை மிச்சம் வைக்கிறார்களோ , அவர்கள் நிச்சயமாக தமது வாழ்நாளில், தீவிர விபரீதத்தினை அடைவார்கள்.

எவர் தமது வீட்டில் சமைத்த உணவை விட்டு வெளியில் வாரத்திற்கு இருமுறைக்கு மேல் உண்கிறார்களோ, அவர்களின் ஜாதகத்தில் , புதன் வலுவிழந்து உள்ளார் என அறியலாம்.

சந்திரன் நிற்கும் ராசியைக் கொண்டு, தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:-

மேஷ ராசியினர் – அதிக சர்க்கரை மற்றும் மசாலா சேர்த்த உணவு வகைகள்.

ரிஷப ராசியினர் – அதிக மசாலா மற்றும் பால் சேர்த்த உணவு பொருட்கள்.

மிதுன ராசியினர் – எந்த ஒரு வாயு உண்டாக்கும் பண்டங்களையும்.

கடக ராசியினர் – குளிர்ச்சி படுத்தும் எந்த பண்டங்களையும் தவிர்த்தல் நல்லது.

சிம்ம ராசியினர் – கசப்பான உணவுப் பொருட்களில் இருந்து விலகியும், வீட்டு உணவுப் பொருட்களை மட்டுமே அருந்தியும், கொழுப்பு பண்டங்களை தவிர்த்தும் இருத்தல் நலம்.

கன்னி ராசியினர் – மாமிச உணவு வகைகளையும் கசப்பு பண்டங்களையும்

துலா ராசியினர் – சர்க்கரை, பாக்கெட்டில் அடைத்த சாறுகள், மற்றும் பழ ரசங்கள்.

விருச்சிக ராசியினர் – வெள்ளெரி காய்களைக் குறைத்தும் , பச்சை தக்காளி தவிர்த்தும்

தனுசு ராசிக்காரர்கள் – கசப்பு மற்றும் சூடு உண்டாக்கும் அதிக மசாலா பொருட்கள்

மகர ராசிக்காரர்கள் – அதிக மாமிச உணவைத் தவிர்க்கவும்.

கும்ப ராசிக்காரர்கள் – அதிக குளிர்ச்சி உண்டாக்கும்  மற்றும் கசப்பு உணவு பண்டங்கள்

மீன ராசிக்காரர்கள் – அதிக குளிர்ச்சி , கசப்பு மற்றும் வாய்வு உண்டாக்கும் உணவு பண்டங்கள்

ஒவ்வொரு ராசிக்குமான  விரிவான தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

– ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

98407 17857

Previous Post
Next Post

Leave a comment