astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017: சிம்மம்
2014/11/02

சிம்மம்

simham

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகி விடுவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். குடும்பத் துணைவருக்கு நெடுநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் மறையும். முன்காலத்தில் இழந்த பொருள்களும் திரும்ப கைவந்து சேரும். உடல்நலம் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனதைச் செலுத்துவீர்கள். பொருளாதார சுபிட்சம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் உயர்படிப்புக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்குச் சிறிது செலவு செய்வீர்கள். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றபடி திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும். புதிய தொழில்களை வெளியூரிலும் ஆரம்பிப்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது உங்களை இந்த காலகட்டத்தில் தேடிவரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அலுவலக வேலைகளில் பளு குறைந்து காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். மனமகிழ்ச்சியளிக்கும் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மிடுக்காக வலம் வருவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் உழைத்து இரண்டு மடங்கு லாபத்தைக் காண்பார்கள். வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியின் கட்டளைகளை தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். எதிரிகளை சாதுர்யமாகப் பேசி எதிர்கொள்வீர்கள். புதிய பயணங்களைச் செய்து புகழும் வருமானமும் பெறும் காலகட்டமாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வமும் புகழும் சேரும். புதிய ஒப்பந்தங்களும் நாடி வந்து சேரும். கடினமாக உழைத்து உங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்வீர்கள்.

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் பார்ப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் சாதகமாக இருப்பார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவர். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகமடைவீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post