சனிப் பெயர்ச்சி பலன்கள் : கடகம்

கடகம்

katakamகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
சனி பகவான் உங்கள் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிலிருந்து ஐந்தாம் வீடான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் அமைதி நிறையும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேக ஆரோக்கியத்துடன் மன வளமும் கூடக் காண்பீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வீர்கள்.எடுத்த காரியங்கள் நினைத்தபடியே முடிவடையும். வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதி வீடு கட்டி குடிப்புகும் யோகமும் உண்டாகும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தீராத பிரச்னை என்று நினைத்திருந்த விஷயம் சாதாரணமாகத் தீர்ந்துவிடும். மேலும் குழந்தைகளுக்குத் தடைபட்டிருந்த கல்வியும் தொடரும். சுயநலவாதிகளை விட்டு விலகுவீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும் புரிந்து கொண்டு அகற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு வெற்றியடையும் காலகட்டமாக இது அமைகிறது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் உங்களால் ஆன உதவிகளைச் செய்து நற்பெயரெடுப்பீர்கள். உங்கள் செயல்கள் சிறு தடங்களுக்குப்பிறகு சாதகமாக முடிவடையும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். மற்றபடி மறைமுக எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் பணியாற்றுவீர்கள். மேலும் செய்தொழிலில் திருப்பு முனையை காண்பீர்கள். அதோடு தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்களும் நிறைவேறும். பெற்றோருடனும் நல்லுறவைப் பேணிக்காக்கும் கால கட்டமிது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குழந்தைகளால் பெருமைபடத்தக்க விஷயங்கள் நடக்கும். செய்தொழிலில் இருக்கும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். நீண்ட தூரப்பயணங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் அமையும். விருப்பியதை விரும்பிய நேரத்தில் வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வான நிலையைக் காண்பீர்கள். கடினமான செயல்களையும் உங்களுக்கு ஏற்றாற்போல் எளிதாக்கிக் கொண்டு விடுவீர்கள். உங்கள் முகத்தில் வசீகரமும் பேச்சில் கம்பீரமும் உண்டாகும். உடலாரோக்கியம் சிறப்பாகவே தொடரும். சகோதர சகோதரர்களுடன் ஒற்றுமை பலப்படும். பரஸ்பரம் நன்மைகளும் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சிறு இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சிலருக்கு அலுவலக விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கலில் சிறிது நஷ்டமும் மனக்கஷ்டமும் ஏற்படும். இதனால் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வெளியிலிருந்து உங்களுக்கு வர வேண்டிய பணம் வருவதில் தாமதம் ஏற்படும். அதனால் கடன் தொல்லைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைக் கூட்டிக் கொள்ளவும். விவசாய உதவியாளர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். புதிய குத்தகைகளையும் எடுப்பீர்கள். அதேநேரம் வீண் சஞ்சலங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மேலும் தொண்டர்களின் அதிருப்திகளைச் சந்திக்க நேரிடும். பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ளவும். மற்றபடி பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

கலைத்துறையினரின் பொருளாதார வசதிகளில் முன்னேற்றமடைவதற்கான அறிகுறிகளைக் காண்பார்கள். உங்கள் திறமைக்குச் சவால்கள் ஏற்படும். இதனால் தீவிர யோசனைகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைச் செய்யவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் நலம் விரும்பிகளிடம் ஆலோசனைகளைப் பெறவும். மற்றபடி ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகத் தொடரும்.

பெண்மணிகள் தங்கள் பேச்சினால் அனைவரையும் தங்கள் வசம் இழுத்துக் கொள்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் நடக்கும். மேலும் குடும்பத்தில் அமைதியும் கணவரிடம் அன்பும் பெருகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் கைகூடும்.

மாணவமணிகள் படிப்பில் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் நிறைவேறும். வருங்காலத்திற்காக நீங்கள் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

Previous Post