சனிப் பெயர்ச்சி பலன்கள் : மிதுனம்

மிதுனம்

mithunamமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சனி பகவான் உங்கள் பூர்வபுண்ய புத்திர ஸ்தானத்திலிருந்து ஆறாம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செய்தொழிலில் மாற்றங்களுடன் கூடிய அனுகூலமான திருப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். வருமானம் இரட்டிப்பாக இருப்பதால், புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களையும் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலமும் வருமானம் உயரக் காண்பீர்கள். மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வேலைகளை திட்டமிட்டு செய்வீர்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு சலுகை காட்டாமல் கடுமையாக நடந்து கொள்வீர்கள். மற்றபடி உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள். குழப்பமான சூழ்நிலையால் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதால் அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்தபிறகு முடிவெடுக்கவும். தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பங்கு சரியாகக் கிடைக்கும். ஆலய திருப்பணிகளிலும்

உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டை செய்வீர்கள். மூத்த சகோதர சகோதரி உறவு மேம்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். குழந்தைகளும் உங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். தேக ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த உடலுபாதைகளிலிருந்து விடுபடும் காலகட்டமாக இது அமைகிறது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் தயக்கங்களையும் குழப்பங்களையும் விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்வீர்கள். புத்திர பாக்கியம் தடைபட்டு வந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். அரசாங்க வழியில் இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். அரசு அதிகாரிகளிடமிருந்தும் சலுகைகள் பெறுவீர்கள். முக்கிய செயல்களில் உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்கள் காரியங்களை நேர்வழியிலேயே செய்யவும். குறுக்கு வழிகளைப் பின்பற்றினால் பின்னால் வருத்தப்பட நேரிடும் என்கிற ரீதியில் இந்தப் பெயர்ச்சி அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவுவதுடன் அனுசரனையாக இருப்பார்கள்.வேலை பளு கூடினாலும் அதை முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டாகும். சம்பள உயர்வும் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.

வியாபாரிகளைத் தேடி பல வகைகளிலும் லாபம் வரும். வியாபாரத்திலிருந்த முட்டுக்கட்டைகள் விலகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். சரக்குகளை விற்பதிலேயே கவனம் செலுத்தி உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

விவசாயிகள் உழைப்பிற்கேற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வார்கள். கால்நடைகளை அதிகம் கவனம் செலுத்தி பராமரிப்பதால் கூடுதல் லாபம் பெறுவீர்கள். நெல் விளைச்சலும் சாதகமாக இருக்கும். அதோடு புதிய குத்தகைகளை நாடிச்செல்ல வேண்டாம்.

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருப்பதால் உங்கள் வேலைகளில் தொய்வு இருக்காது. அரசு அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரின் திறமைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதில் வெற்றியடைய சில செலவுகள் செய்வீர்கள். சக கலைஞர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும் என்பதால் செயல்களில் தெளிவு பிறக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பார்கள். கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். சரளமான பணவரவால் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளுடன் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

மாணவமணிகள் கல்வி கேள்விகளில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். இருந்தாலும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்கவும். இதனால் ஆசிரியர்களின் நேசத்தைப் பெறுவதுடன் கூடுதல் மதிப்பெண்களையும் பெறுவீர்கள். நண்பர்கள் தோழமையுடன் நடந்து கொள்வதுடன் உதவிகரமாகவும் இருப்பார்கள்.

பரிகாரம்: சிவ தரிசனம் செய்து வாருங்கள். பிரதோஷ வழிபாடு உகந்தது.

Next Post