சனிப் பெயர்ச்சி பலன்கள் : ரிஷபம்

ரிஷபம்

rishabam

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சனி பகவான் உங்களின் ஆறாம் வீட்டிலிருந்து நட்பு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வெளியூரில் தொழில் செய்தவர்கள் சொந்த ஊருக்கு வந்து தொழில் செய்வர். புதிய வீடு கட்ட அடித்தளமிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வீடு, நிலங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரத் தொடங்கும். கோர்ட் விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். திருமணமாகாதவர்களுக்கு சிறிய தடங்களுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு சில அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். இக்கட்டான தருணங்களிலும் சரியான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் இணைவார்கள்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மனவலிமைகூட பயிற்சி செய்வீர்கள். நேரான எண்ணங்கள் வளரும். உற்சாகமாக பணியாற்றுவீர்கள். ஆன்றோர், உயர்ந்தோரின் ஆதரவுடன் சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திடும்பொழுது ஷரத்துகளை நன்றாக படித்து புரிந்து கொண்டு கையெழுத்திடவும். புனித யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நன்னடத்தையால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் காலகட்டமாக திகழும்.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் கைகொடுக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை எட்டிவிடும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். இல்லறத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ஆன்மிக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரால் நன்மைகள் உண்டாகும். நெடுநாளாக நடக்காமல் இருந்த சுப காரியங்கள் திடீரென்று நடந்து உங்களைத் திக்குமுக்காட வைத்துவிடும். மேலும் அதிக பணவரவு, அதிர்ஷ்ட வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் உங்களைத் தேடிவரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த காலகட்டத்தில் அலுவலக வேலைகள் அனைத்தையும் சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். மேலும் சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மேலதிகாரிகளை மதித்து நடந்து கொள்வீர்கள். பணவரவுடன் விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது வெற்றிகரமான காலகட்டமாக அமைகிறது. உங்கள் வியாபார யுக்திகள் புதுமையாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை நோக்கி படையெடுப்பார்கள். அதனால் லாபம் அமோகமாக இருக்கும். தாமதமானாலும் திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். அதேநேரம் கடன்கள் கொடுத்து வியாபாரத்தை பெருக்க நினைக்க வேண்டாம்.

விவசாயிகள் தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பார்கள். போட்டிகளுக்குத் தகுந்தாற்போல் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் கால்நடைகளுக்காகவும் பூச்சிக்கொல்லி மருந்துக்காகவும் செலவு செய்ய நேரிடும். இருப்பினும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் என்பதால் உடன் உழைப்பவர்களை அனுசரித்து வேலை வாங்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பலம் குறையும். ஆகையால் அவர்கள் உங்களிடமிருந்து விலகியே நிற்பார்கள். அதோடு கட்சியில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்களிடம் முழு நம்பிக்கை வைத்து அளிக்கும் பணிகளை செவ்வனே செய்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள்.

கûலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களால் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். முக்கிய முடிவுகளை நெருங்கியவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கவும். குழந்தைகள் குறித்து எடுக்கும் முடிவுகளிலும் நிதானம் தேவை. ஆடம்பரப் பொருள்களுக்காக கைப்பொருளைக் கரைக்க வேண்டாம். மற்றவர்கள் நீங்கள் கோபப்படும்படி தூண்டினாலும் நிதானத்துடன் நடந்து கொள்வதால் வாழ்க்கை குழப்பங்களைத் தவிர்த்திடலாம்.

மாணவமணிகள் விளையாட்டில் உள்ள ஆர்வத்தைப் போன்றே கல்வியிலும் நாட்டம் செலுத்தி உழைக்கவும். மற்றபடி கடுமையாக முயற்சித்து படித்தால் மட்டுமே சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களை பெறுவீர்கள். மேலும் யாரையும் உடனுக்குடனே நம்ப வேண்டாம். அதோடு நண்பர்களிடமும் பிறரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post