astrology dinamani
சனிப் பெயர்ச்சி பலன்கள் – 2017: மீனம்
2014/11/02

மீனம்

meenam

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். வருமானம் சீராக உயரத் தொடங்கும். உங்களின் சேமிப்பும் உயரத் தொடங்கும்.

அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேகத்தில் பொலிவு உண்டாகும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உங்களுக்குத் தேவையான உதவிகளைத் தக்க சமயத்தில் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் பெருமையுடன் பார்க்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களில் சிறு இடையூறுகள் குறுக்கிட்டாலும் சிறிய தாமதத்திற்குப் பிறகு வெற்றியடைந்து விடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி வரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இன்முகத்துடன் பழகுவார்கள்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய விஷயங்களில் ஈடுபட்டு உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதேநேரம் எவரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில்
பணம் வாங்கித் தர வேண்டாம். பெற்றோர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அவர்களுக்காக சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். மற்றபடி பதற்றப்படாமல் நிதானமாகத் தெளிவுடன்
சிந்தித்து உங்கள் செயல்களைத் திறம்படச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். அதேநேரம் கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். உங்களின் உழைப்பு வீண் போகாது. சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்களும் உண்டாகும். மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அதேநேரம் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அதோடு தன்னிச்சையாகச் செயல்படாமல் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே உங்களின் எண்ணங்களை நிறைவேற்றவும்.

விவசாயிகள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுவார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள். போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டு விளைபொருள்களின் விற்பனையை
லாபகரமாக முடிப்பார்கள். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக வெற்றியைத் தேடித் தரும். இதனால் பெயரும் புகழும் கூடத் தொடங்கும். அதேநேரம் கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை
வைத்துக்கொள்வது அவசியம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள்
கிடைக்கும். சக கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருக்கவும். மனதில்பட்டதை உடனுக்குடன் பேசுவதைத் தவிர்க்கவும். மற்றபடி குடும்பத்தில் தாமதமாகி வந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பு ஆதரவைப் பெறுவீர்கள். கல்வியில் பெரிய வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய காலகட்டம் இது. உங்கள் நண்பர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post