astro_dinamani
சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரகாரர்களுக்கு தோஷம்?
2017/08/07

சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரகாரர்களுக்கு தோஷம்?

• சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ இருக்கிறது. இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும். சந்திர கிரகணம் கேதுவால் பிடிக்கப்படுவதால் பரிகாரம் அவசியம் என்று ஜோதிட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் உணவு பொருட்களில் கிரகண கதிர்கள் தாக்காவண்ணம் தர்பையை (அருகம்புல்) போட்டுவைப்பதும் மரபு.

• கர்ப்பிணி பெண்கள் இன்றைய சந்திர கிரகணத்தை பார்க்க கூடாது. மற்றவர்கள் கிரகணம் முடிந்ததும் நள்ளிரவு 1 மணிக்கு சந்திரனை வணங்கி விட்டு, நீராட வேண்டும். பிறகு பித்ருக்களுக்கு உரிய தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரகண நேரத்தின் போது பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். கிரகண நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளும், கர்ப்பிணிகளும், நோயுற்றவர்களும் கிரகணம் முடிந்த பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும்.

• திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று சந்திர கிரகணம் வருவதால் சூடாமணி கிரகணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தோஷம் பெறும் நட்சத்திரங்கள்

• உத்திராடம், திருவோணம், அவிட்டம், ரோகிணி, அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்த நாள் கோயிலுக்கு சென்று விநாயகர், சந்திரன், கேது பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்து கொண்டால் நல்லது. மேலும் திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

நடை அடைக்கப்படும் கோயில்கள்

• இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வால் பெரும்பாலான கோவில்கள் இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது.

• திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய மாலை 4 மணி முதல் நாளை அதிகாலை 2 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10.52 மணி முதல் 12.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இன்று மாலை முதல், நாளை காலை வரை நடை அடைக்கப்பட உள்ளது.

• பின்னர் கோயில் கழுவி சுத்தம் செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்படும் என்றும், இதனால் இன்று விசேஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

• சந்திர கிரகணத்தின் போது உணவு உண்ணுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், இன்று மாலை 4.30 மணி முதல் நாளை காலை 9 மணி வரை திருப்பதியில் அன்னதான விநியோகம் நிறுத்தப்படுகிறது.

• பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று மாலை 4:30 மணி முதல் தரிசனம் கிடையாது. அனைத்து சன்னதிகளின் நடைகள் அடைக்கப்படுகிறது. புண்ணிய பூஜைகளுக்கு பின், 8-ம் தேதி காலை 7:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று பஞ்சவடீ பஞ்சமுக கோயில் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

• வேலூர் பொற்கோவிலில் பிற்பகல் 3.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) அன்று காலை 8 மணிக்கு திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

• திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும்.

• திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணி வரை செயல்படும். மாலையில் நடை திறக்கப்படமாட்டார்கள். கிரகணம் முடிந்ததும் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Previous Post
Next Post

Leave a comment