astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: விருச்சிகம்
2018/08/13

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

 

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பளு அதிகரித்தாலும் சரியாகத் திட்டமிட்டு பணிகளைச் செய்து முடித்து விடுவீர்கள். உடன் பிறந்தோர் நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். செய்தொழில் ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றம் செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவத்திற்கு எந்தக் குறைவும் வராது. பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

மனதில் இருக்கும் பயத்தை வெளியில் காட்ட மாட்டீர்கள். செயல்களைக் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்கள் அலட்சியப்படுத்தினாலும் கவலை வேண்டாம். வெளியில் கொடுத்திருந்த தொகை கிடைக்கத் தாமதமாகும். மனதில் எதிர்நீச்சல் போடும் நிலை உண்டாகும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் புதிய செலவினங்கள் ஏற்பட்டாலும் வருமானத்தைப் பல விதங்களில் பெருக்கிக்கொள்ள முனைவீர்கள். தைரியத்துடன் போட்டிகளை எதிர்கொள்வீர்கள். வைராக்கியத்தைக் கண்டு எதிரிகளும் அஞ்சுவார்கள். முயற்சிகளில் முழு ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். பணவிரயத்தில் கொடுத்த வாக்கை சரியாகக் காப்பாற்றுவீர்கள். தர்மசிந்தனையோடு செயலாற்றுவீர்கள். மனிதநேயம் வெளிப்படும். குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி, தெளிவு பிறக்கும். குறிக்கோளை எப்பாடுபட்டேனும் எட்டிவிடுவீர்கள். பணக்கஷ்டம் நீங்கும். பொதுகாரியங்களில் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டிவிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அவ்வப்போது வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மறையும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். வம்பு வழக்குகளை விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு அசையாச் சொத்துகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடி வரும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தரவேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரித்தாலும் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கௌரவத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

வியாபாரம் நன்றாகவே நடந்தால் பொருளாதார நிலையில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடவும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிடைக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நிலங்களை வாங்கும் யோகம் உள்ளது.

அரசியல்வாதிகள் தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்கு திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நெடுநாளைய கனவுகள் பலிக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த காலமாகவே காணப்படும். கணவர் மதித்து நடப்பார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளையும் பெறுவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post