astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: ரிஷபம்
2018/10/13

(கார்த்திகை 2, 3, 4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ம் பாதங்கள்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் மனதிற்குப் பிடித்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வசிக்கும் வீட்டை நவீனப் படுத்துவார்கள், புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்த இழுபறிகள் மாறி சீராக வருமானம் வரத் தொடங்கும். உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு மிடுக்கான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

செய்தொழிலில் அபிவிருத்தி செய்ய பயணங்களைச் செய்ய நேரிடும். சாதுர்யத்துடன் பேசி அனைவரையும் கவர்வீர்கள். மனதிலும் தெளிவு பிறக்கும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்காமல் தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்று சரியாக நிறைவேற்றுவீர்கள். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் துணிந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்களிலும் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை விடமாட்டீர்கள். அனைவருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டாம். எதிரியின் பலம் அறிந்து செய்கைகளை மாற்றிக் கொள்ளவும். உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். இல்லத்தில் களவு போயிருந்த பொருள் திரும்பவும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் நெடுநாள்களாக தகராறில் இருந்த சொத்து கை வந்து சேரும். அரசாங்கத்திலிந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடக்கும். நண்பர்களாலும் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் உங்களை கலந்தாலோசித்த பின்னரே முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். உறுதியான முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பீர்கள். உங்கள் பழைய அனுபவங்கள் தக்க நேரத்தில் கை கொடுக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பொருளாதாரத்தில் சுபிட்சங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சிலர் ஆர்வக் கோளாறினால் எக்குதப்பாக எதிர்பாராத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் பேசும்போது கவனத்துடன் இருக்கவும். உங்கள் வேலைகளை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செய்து வரவும். வியாபாரிகள் இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுத்தவும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோசித்தப் பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். விவசாயிகள் சிறு சங்கடங்களைச் சந்திப்பீர்கள். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பீர்கள். கொள்முதலில் லாபங்கள் இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கால்நடைகளுக்கும் செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். தொண்டர்கள் அனுகூலமாக இருப்பார்கள். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். அனாவசியப் பயணங்களைச் செய்வீர்கள். மேலிடத்தின் அதிருப்பதிக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் உயரும். சக கலைஞர்கள், ரசிகர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் பிரச்னையை உண்டாக்குவார்கள். சுப காரிய நிகழ்வுகளில் உறவினர்களை உரிய மரியாதையுடன் கௌரவப்படுத்தவும். மாணவமணிகள் படிப்பில் தீவிர முயற்சி செய்து படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை உளமார வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post