குருப் பெயர்ச்சி பலன்கள் : மீனம்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் இந்த ஆகஸ்டு மாதம் முதல் 2017 ஜனவரி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். வழக்குகள் வெற்றிகரமாக முடிந்து அதனால் வரவேண்டிய பணம் மொத்தமாகக் கைவந்து சேரும். இதனால் புதிய அசையும் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். திருமணம் தடைபட்டிருந்தவர்களுக்கு திடீரென்று திருமணம் கை

கூடும். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் லாபங்கள் கிடைக்கும். விசாரிக்காமல் முன்ஜாமீன் போட்டவர்கள் தெய்வாதீனமாக பணநஷ்டம் இல்லாமல் அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள். உடன்பிறந்தோர் வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மேலும் வாராக் கடன் என்று கைவிட்ட தொகையும் திரும்ப கைவந்து சேரும். கடினமான உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடலுழைப்புக்கு ஏற்ற பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளும் கதிரவனைக் கண்ட பனிபோல விலகி ஓடிவிடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம், அந்தஸ்துக்குக் குறைவு வராது என்று உறுதியாகக் கூறலாம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் எந்நேரமும் கலகலப்பும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீண்ட நாள்களாக நினைத்திருந்த ஒரு விஷயம் உங்கள் மனம் போல் திருப்தியாக முடியும். பொதுவாழ்க்கையில் புதிய பொறுப்புகள் தேடிவரும். அவைகளை வெற்றிகரமாக முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள். உடலாரோக்கியத்திலும் எந்தக் குறையும் ஏற்படாது. தேவையான உடற்பயிற்சிகளைச் செவ்வனே செய்து மிடுக்காக காட்சியளிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புனிதத் தலங்களுக்கு யாத்திரையாகக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அவைகளை கர்வப்படாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். இந்த காலகட்டம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயலாற்றுவீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களின் வேலைத்திறன் கூடும். மேலதிகாரிகளின் மனக்கசப்புகளுக்கு உள்ளானவர்கள் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாவார்கள். அதனால் தடைபட்டிருந்த ஊதிய உயர்வு நல்லபடியாக கிடைக்கும். பணவரவும் சீராகவே இருக்கும். தேவையில்லாத பயணங்கள் செய்து வந்தவர்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களும் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். அவர்களின் வேலைகளையும் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாகவே நடக்கும். முயற்சிகளில் உறுதியாக இருந்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருக்கும் போட்டிகளைத் திறமையாகச் சமாளிக்கும் ஆற்றல் கூடும். தற்போது புதிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சீராக இருக்கும். எதிலும் பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் சக விவசாயிகளை அனு

சரித்துச் சென்று குத்தகைகளை முடிக்க முயற்சிக்கவும். பாசன வசதிகளையும் சீராக்கிக் கொள்ள சிறிது செலவு செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

அரசியல்வாதிகள் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள். பழைய கஷ்டங்கள் மறைந்து சந்தோஷமாக நடைபோடுவீர்கள். எவரையும் அலட்சியப்படுத்தாமல் நல்லபெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களை அதிகம் நம்பவேண்டாம். பெண்மணிகள் செல்வச் செழிப்போடு வாழக்கூடிய நிலைமை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மாணவமணிகள் கேளிக்கை போன்றவைகளில் நேரத்தைக் கழிப்பார்கள். கல்வியிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கெட்டப்பழக்கங்கள் உள்ள நண்பர்களையும் திருத்துவார்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post