குருப் பெயர்ச்சி பலன்கள் : மகரம்

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் இந்த ஆகஸ்டு மாதம் முதல் 2017 ஜனவரி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் காரியங்களை அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ் மரியாதை அந்தஸ்து இவைகளைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். பணக்கஷ்டம் மறைந்துவிடும். பொருளாதார விஷயங்களில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதனால் எதிர்பார்த்த சொத்து கிடைத்து அதன் மூலம் வருமானமும் வரத் தொடங்கும். உபரி வருமானத்தால்

பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு எதிராக தீட்டும் ரகசிய திட்டங்களை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்ற செயல்முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் சாதுர்யமான பேச்சினால் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டுவருபவர்களையும் உங்களுக்கு பலமாக மாற்றிக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் உடன்பிறந்தோரை அனுசரித்துச் சென்று குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தக்கவைத்துக் கொள்வீர்கள். பலருக்கும் சாதகமான இடமாற்றம் ஊர்மாற்றம் மற்றும் வெளிநாடு வாசம் ஆகியவைகள் கிடைக்கப்பெறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மனதாலேயே கணக்குப்போட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் திட்டங்களை மற்றவர்கள் அறியாமல் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களைத் தேடி வந்து நட்பு பாராட்டுவர். அதேநேரம் அவர்களின் ஆதரவினால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். எவரிடமும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடவேண்டாம். உடன்பிறந்தோர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். எவரையும் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம். அரசாங்க அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு தேவையான சலுகைகளைப் பெறவும். பெற்றோர் வகையில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். அவர்களின் அன்பும் ஆதரவும் நிரம்ப கிடைக்கப் பெறுவீர்கள். புதிய அசையும் அசையாச் சொத்துக்களை வாங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் குறைகள் கூடத்தொடங்கும். விரும்பிய இடமாற்றங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகலாம். உங்களின் சமயோசித புத்தியால் தடைகளைத் தகர்ப்பீர்கள். அலுவலகத்தில் திறமைகளைக் கூட்டிக்கொள்ளும் பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கற்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமாராகவே நடக்கும். லாபம் கூடுதலாகவே இருக்கும். புதிய முதலீடுகளை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிச் செய்வீர்கள். கூட்டாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சுமாராக இருந்தாலும் மாற்றுப் பயிர் செய்வதிலும் பால் வியாபாரம், முட்டை வியாபாரம் போன்ற உப தொழில்கள் மூலமாக வருமானத்தைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து கட்சி மேலிடத்தின் பார்வையை கவர்வர். தொண்டர்களும் உங்களுக்கு அடிபணிந்து நடப்பர். சிறப்பான பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளின் சூழ்ச்சியை முன்பே கண்டறிந்து உங்கள் புத்திசாலித்தனத்தால் முறியடிப்பீர்கள். வருமானத்திற்கு குறைவில்லை. பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாக இது அமைகிறது. இல்லத்தில் குதூகலம் தாண்டவமாடும். குழந்தைகளுக்காகச் செலவு செய்து மகிழ்வீர்கள். சில நேரங்களில் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். உணவு விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்கள் என்னநினைப்பார்களோ என்று நினைக்காமல் உங்கள் மனதில் உள்ள எண்ணங்களைத் திறம்பட செயலாக்குவீர்கள். மாணவமணிகள் நன்றாகப் படித்து சிறப்பான மாணவர் என்று பெயரெடுப்பீர்கள். மறதி மறைந்து தெளிவுடன் பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பீர்கள். நண்பர்களுக்கு படிப்பில் உதவி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆதரவுடன் விளையாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post