astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: மிதுனம்
2018/10/13

(மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்ப்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிலும் அவசரப் படாமல் நிதானமாகப் பணியாற்றவும். செய்தொழிலில் விழிப்புணர்ச்சியுடன் இருந்து செயலாற்றுவீர்கள்.நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். செய்தொழிலில் புதிய ரகசியங்களை அறிவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உடல்உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காரியமாற்றுவீர்கள். பெற்றோருடன் அனுசரித்து செல்வீர்கள். அவர்கள் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.

வருமானம் சிறப்பாக இருந்தாலும் சிறிய விரயங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பேச்சில் கவனம் தேவை. மனதில் உத்வேகம் இருந்தாலும் சூழ்நிலைகள் முழுவதும் சாதகமாக அமையாது. ஆன்மிகச் சிந்தனைகள் மெருகேறும் காலகட்டமாக இது அமைகிறது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எவரிடமும் அனாவசியமாகப் பேச்சு வேண்டாம். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின்வாங்க மாட்டார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் எந்த வகையிலாவது ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும் காலகட்டமிது.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். அவர்களின் தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் கூட்டாளிகளிடமிருந்து வரவேற்பு கிடைக்கும். பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் நிர்வாகத்திறன் பளிச்சிடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளு குறையும். உங்கள் வேலைகளில் ஊழியர்கள் தாங்களாகவே பங்கு கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை உணர்வுபூர்வமாக பரிசீலித்து சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். விருப்பான பணி இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். சிலர் கூட்டாளிகளை விட்டுப் பிரிந்து தனியாக தொழில் செய்யும் காலகட்டமிது. விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய குத்தகைகளை யோசித்து எடுக்கவும்.

அரசியல்வாதிகள் வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளில் இருந்த குழப்பங்கள் விலகி புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்கள் சேவைகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உங்கள் கௌரவம் உயரும். அரசு அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார்கள். கலைஞர்கள் தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வார்கள். அதை உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டும் புகழும் அடைவீர்கள். சில பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பார்கள். சீரிய முயற்சிக்குப்பிறகு சுபகாரியங்கள் நடக்கும். சமையல் செய்யும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்களுக்கு அடித்தளம் போடுவதற்கான சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கை உயரும். ரகசியங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சீதா ராமரை உள்ளன்புடன் வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post