astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: மேஷம்
2018/10/13

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் தீயவர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

சமுதாயத்தில் உங்கள் நிலை உயரக் காண்பீர்கள். சிலருக்கு அரசு விருதுகளும் கிடைக்கும். நெடுநாளாக தொடர்ந்து வந்த சட்டச் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு விடுவீர்கள். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும் கௌரவப் படுத்தப் படுவீர்கள். இந்த காலகட்டத்தில் அடிக்கடி சிறிய தூரப் பயணங்களைக் செய்யவும் நேரிடும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் தயக்கத்துடனும் பயத்துடனும் செய்து வந்த செயல்களை தைரியத்துடனும் தெளிவுடனும் செய்யத் தொடங்குவீர்கள். அதோடு கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, “கொக்குக்கு ஒன்றே மதி’ என்ற ரீதியில் காரியமாற்றுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதைகள் கீழிறங்காமல் பார்த்துச் சொள்வீர்கள். சிலருக்கு வெளியூருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அன்னையின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சிறு மருத்துவச் செலவுகளும் உண்டாகும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் சிலர் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள். புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். செய்தொழிலில் சிறிது கடன்சுமை ஏற்பட்டாலும் உபரி வருமானத்தால் அவைகளை சமாளித்து விடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சு கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ இந்த காலகட்டத்தில் கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலைகளைக் காண்பீர்கள். தடைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு திறமையுடன் பணியாற்றி வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாக இருந்தாலும் கெடுதல் ஏதும் செய்ய மாட்டார்கள். அலுவலக ரீதியிலான பயணங்களை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அரசு வழியில் அனுகூலங்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளிடம் பகை, மறைமுக விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். விளை பொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய வேண்டி வரும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். சமுதாயத்தில் பெயர், புகழ் கூடும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். கட்சி மேலிடம் உங்களின் செயல்பாடுகளை ஊன்றி கவனிக்கும். மறைமுக, நேர்முக எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு அடிபணிவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத பணம் பெருகும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பயணங்கள் நன்மை தரும்.

பெண்மணிகள் நிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாடுகளில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். சிறு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். மாணவமணிகள் இந்த ஆண்டு கல்வியில் நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். பாடங்களை விடியற்காலை நேரத்தில் எழுந்து படித்து மனப்பாடம் செய்யுங்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

Previous Post
Next Post