astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: தனுசு
2018/10/30

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். இருப்பினும் சில நேரங்களில் செலவுகளைத் தவிர்க்க முடியாது போகும். தனிப்பட்ட முறையிலும் கூட்டுத்தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும். தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச்சார்ந்து செய்துவந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். கவனமாக இருந்து போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். கொடுக்கல்வாங்கல் விஷயங்களில் கவனமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உடன்பிறந்தோருக்கும் சிறிது செலவு செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களைச் செய்ய வேண்டாம். பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிக வருமானத்தைப் பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணத்தைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம், மனவளம் ஓங்க யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உற்சாகத்துடன் செயல்படும் காலகட்டமிது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜ நிலைமை உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். சேமிப்பு கணிசமாக உயரும். செய்தொழிலில் நிலைமைகள் அனைத்தும் சாதகமாக அமையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்குவீர்கள். சிறிய தூரப்பயணங்களைச் செய்ய நேரிடும். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். மிடுக்கான தோற்றத்தால் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் புத்திசாலி என்று பெயரெடுப்பீர்கள். ஆழ்ந்து சிந்தித்து தெளிவாக முடிவெடுப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நிலைமை உண்டாகும். சிலருக்கு அரசாங்க வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பெற்றோர் வழியில் இருந்த உடலுபாதைகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். சமூகத்தில் உங்கள் பெயர் பிரபலமடையும். ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்து பிறருக்கு ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பேராதரவு கிட்டும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் வேலைகளைத் தாமாக முன்வந்து பகிர்ந்துக் கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும், கொள்முதலிலும் அதிக லாபங்களைக் காண்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பி அடைப்பீர்கள். வயல் வரப்பு சண்டைகளில் சாதகமான தீர்வுகளைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிக்குச் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் தேடி வரும். ஏற்றுக் கொள்ளுங்கள். அதிதீவிர முயற்சியுடன் வேலைகளைத் தொடங்குங்கள். வழக்குகளில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கட்சிமேலிடத்தின் ஆதரவுடன் வெளிநாடு செல்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை பக்குவமாகச் சமாளிப்பது மிக அவசியம். மனதையும் உடலையும் நேர்த்தியாக பராமரிக்க பிராணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்யவும்.

பெண்மணிகள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற நல்லதொரு சந்தர்ப்பம் இது. உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாங்களாகவே அனைத்து செயல்களையும் செய்வது நல்லது. நன்றாகப் படித்து பெற்றோர் மற்றும் ஆசிரியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post