astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: துலாம்
2018/10/13

(சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உழைப்புகேற்ற வருமானம் கூடத்தொடங்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். ஏழை எளியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். புதிய இடங்களில் சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். ஆடம்பரக் கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள்.

உடன்பிறந்தோரிடம் எதிர்பார்த்ததற்கும் மேலாக உதவிகளைச் செய்வீர்கள். முதலீட்டை விட இருமடங்கு லாபம் கிடைக்கும் தொழிலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்களை மதிக்காமல் நடந்தவர்கள் இப்போது உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். பேச்சில் ஏதும் தவறு ஏற்பட்டாலும் அதை எவரும் பெரிது படுத்தமாட்டார்கள்.

குடும்பத்தில் நிம்மதி நிறையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மனக்கவலைகள் மறைந்து எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகள் பலப்படும். அரசு திகாரிகள் உங்கள் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். செய்தொழிலில் புதிய யுக்தியுடன் செயல்பட்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். படாடோபமில்லாமல் அடக்கத்துடன் பணியாற்றுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்கு ஏதுவான காரியங்களைச் செய்வீர்கள். நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். அனைத்து சுபக்காரியங்களையும் நடத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு வராது.
தொழில் ரீதியாக அதிக பயணங்களைச் செய்ய நேரிடும். அரசாங்கத்தால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புத்துணர்ச்சியுடனும் வைராக்கியத்துடனும் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றி உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவீர்கள். சக ஊழியர்களிடம் பல பிரச்னைகள் உண்டாகுமாதலால் அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக முடியும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாகனங்களுக்குச் சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்து வருமானம் ஈட்டுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். சக விவசாயிகளுக்கு உதவுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயரும் புகழும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். புதுத்தெம்புடன் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை கூடும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். தாய் வீட்டுச் சீதனமும் வந்து சேரும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தி முன்னேற எண்ணுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: திருவேங்கடமுடையானை வழிபட்டு நலன்கள் பல பெறவும்.

Previous Post
Next Post