astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: சிம்மம்
2018/10/13

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நெடுநாட்களாக தள்ளிப்போயிருந்த குடும்ப பாகப் பிரிவினை சாதகமாக முடிவடையும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். தர்மகாரியங்களுக்காகவும் சிறிது செலவு செய்வீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிரிகளின் முட்டுக் கட்டைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சி அடைவீர்கள்.

சமுதாயத்திலும் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மந்தமாக நடந்து வந்த விஷயங்கள் வேகமாக நடக்கத் தொடங்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். பேச்சில் கண்ணியம் நிறைந்து காணப்படும். மனதில் இருந்த சோர்வு அகன்று தெளிவுடன் காணப்படுவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். செல்வமும் செல்வாக்கும் கூடும். புதியவர்களும் முக்கியமான பொறுப்புகளை உங்களுக்கு வழங்குவார்கள். உங்கள் அந்தஸ்து உயரக் காண்பீர்கள்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக்கி அதில் வெற்றி பெற்று பெயர் புகழ் பெறுவீர்கள். எந்தச் செயலையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிக்கவும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது குறை ஏற்பட்டாலும் உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் சரியாகிவிடும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் சாதுர்யமாகப் பேசிப் பழகவும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ இந்த காலகட்டத்தில் கூடாது. வம்பு வழக்குகளிலிருந்து ஒதுங்கி இருக்கவும். எவரையும் ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் நினைத்ததுபோல் துரிதமாக காரியங்கள் நடக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம். உங்கள் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கை கூட்டுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உபரி வருமானத்தை வருங்காலச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். புதிய வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்வீர்கள். அதிக ஆசைப்பட்டு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதமாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் அதிக செலவு செய்வீர்கள். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் சிரமப்படாமல் காரியமாற்றலாம் என்று நினைத்து செயலில் இறங்குவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கொப்பானது. கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியான வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிறு தடங்கல்களுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் கூடுதல் வருமானத்தால் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்க வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் சிரத்தை குறைந்து காணப்பட்டாலும் உரிய நேரத்தில் பாடங்களை மனதில் நிறுத்தி மதிப்பெண்களை சிறந்த முறையில் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கூடுமாதலால் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post