astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: கும்பம்
2015/07/03

(அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சீராகவே இருக்கும். எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டை மீறி போக வாய்ப்பில்லை. அனைத்து செயல்களிலும் முழு முயற்சியினால் வெற்றி பெறுவீர்கள். சில போராட்டங்களையும் சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கற்பனை பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.

செய்தொழிலில் வளர்ச்சியடைய கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தாமதப்பட்டிருந்த திருமணங்கள் துரிதமாக நடக்கும். சோதனைகளை பொறுமையுடன் இருந்து சாதனைகளாக மாற்றுவீர்கள். காரணமில்லாமல் உங்களை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். உபரி வருமானத்திற்கான வாய்ப்புகளையும் தேடிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல்நலமும் மனவளமும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் செல்வாக்கு உயரும். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். செய்தொழிலில் இருந்த இடர்பாடுகள் நீங்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. அனைவரையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் அதனால் வருமானமும் கிடைக்கும். மனதை அரித்துக் கொண்டிருந்த கவலைகள் மறைந்து தெளிந்த நீரோடைப் போல் மாறும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத இடங்களிலிருந்து பொருள் வரவுக்கு இடமுண்டாகும். உடன்பிறந்தோர் நன்மை செய்வார்கள். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சாதனையாளர் என்று பெயர் பெறும் யோகம் உண்டாகும். பழைய விரோதிகள் நண்பர்களாக நேசக்கரம் நீட்டும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் மனந்திறந்து அனைத்தும் பேசவேண்டாம். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் வியாபாரத்திலேயே குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செயல்படுத்தவும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.

விவசாயிகள் சுமாரான அபிவிருத்தியைக் காண்பார்கள். பயிர்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி விவசாயத்தைப் பெருக்குவர். சிலர் கிணறுகளை ஆழப்படுத்துவது நல்லது.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணைப்பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்திருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. கலைத்துறையினர் தேவைக்கேற்ற வருமானத்தைக் காண்பார்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். புதிய சொத்துகள் வாங்கும்போது கவனம் தேவை.

பெண்மணிகளுக்கு பிதுராஜித சொத்துகள் கைவந்து சேர இழுபறி ஆகும். பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். கணவருடனான அன்யோன்யம் சாதாரணமாகவே காணப்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லும் நேரமிது. மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பிரியங்களுக்கு ஆளாவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெற, கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். விளையாட்டுகளிலும் கவனம் தேவை.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

Next Post