astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018: கன்னி
2018/10/13

(உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து செய்தொழில் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி நட்புடன் பழகுவார்கள். கடினமான வேலைகளை சுலபமாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சமூகத்தில் பெரியோர் நண்பர்களாவார்கள். இதனால் அந்தஸ்து கூடும். சிலருக்கு அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார் படுத்திக்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறி இலக்குகளை அடையும். பொருளாதார வளம் மேம்படும். பின்னடைவுகள் நீங்கி, உங்களை முன்னோக்கி உந்தித் தள்ளும் இறையருள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை இளைய உடன்பிறப்புகள் அனுசரித்து நடந்து கொண்டாலும் பெரிய நன்மை இல்லை. பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. அலைகழித்து வந்த எதிரிகள் மறைந்து போவார்கள். வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டி பந்தயங்களில் எளிதில் வெற்றியடைவார்கள். சிலருக்கு இந்த காலகட்டத்தில் விருதுகளும் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளால் தெய்வ பலன் கூடும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு உதவி தொகையுடன் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு உண்டாகும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் தந்தையின் உடல்நலத்தில் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து வருமானம் வரத்தொடங்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் செயல்களில் வெற்றி உண்டாகி அதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது ஜனத்தொடர்பும் நன்மையைத் தரும். எதிர்பார்த்த பொறுப்புகளும் கிடைக்கும். வருமானம் உயரத் தொடங்கும். குல தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் உண்டாகுமாகையால் கவனமாக இருக்கவும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச்சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

சிறிய முதலீடுகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பயிர்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்தில சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாற்றுப் பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளவேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள்.  சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள்.

பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப நிலைமை உயரும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post