astrology dinamani
குருப் பெயர்ச்சி பலன்கள் 2018 : கடகம்
2018/10/13

(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் தெளிவாக சிந்தித்து காரியமாற்றுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். பொருளாதாரம் சீரும்சிறப்புமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பார்கள். அன்னையுடன் இணக்கமாக வாழும் சூழ்நிலை உருவாகும்.

புதிய சொத்துகளை வாங்கவும் நேரிடும். பழைய சொத்துகளின் மூலம் வருமானம் கிடைக்கத் தொடங்கும். சிலருக்கு நெடுநாளைய விற்பனையாகாத சொத்துகள் விற்பனையாகும். குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். காணாமல் போயிருந்த பொருள்கள் மீண்டும் கைவந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் பாதுகாப்பீர்கள்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சிலருக்கு மனதிற்குப்பிடித்த ஊர்களுக்குச் சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உடன் உழைப்பவர்கள், நண்பர்களை அலட்சியப்படுத்தாமல் அனைவரையும் அரவணைத்துப் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல்களை சாதனைகளாக மாற்றிக் காட்டுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சியில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். சமயோஜித புத்தியால் தக்கசமயத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்துவீர்கள்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுப முயற்சிகள் நற்பலனைத் தரும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாக தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களால் ஏற்படும் சிறு பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். கருத்து மோதல்களைத் தவிர்த்திடவும். பொருளாதாரத் தடங்கல்கள் விலகும். வெளிநாடு தொடர்பான காரியங்களும் வெற்றி பெறும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றப் பாதையில் செல்லும் காலகட்டமிது. அலைச்சல் திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பேச்சு வார்த்தைகளினால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்களிடம் வேலைப் பார்ப்பவர்கள் அடங்கி நடப்பார்கள். சுகத்தை எதிர்பார்க்காமல் உழைத்தால் நலம் பெறுவீர்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பீர்கள். அமோகமான மகசூலைக் காண்பார்கள். விளைபொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் உண்டாகும். கால்நடைகளால் வரும் லாபம் குறைந்திருக்கும்.

அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். உங்களுக்கெதிரான வழக்குகள் சாதகமாக முடியும். கட்சி மேலிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். உங்கள் செயல்களில் சிறிய தடுமாற்றங்களைக் காண்பீர்கள். ஆனாலும் செல்வாக்கு குறையாது. சிறிய தடைகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும் நேரமிது.

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post