astrology dinamani
காலுக்குக் கொலுசு அணிவிக்கச் சொல்லி கேட்ட லலிதாம்பிகை!!
2018/06/13

காலுக்குக் கொலுசு அணிவிக்கச் சொல்லி கேட்ட லலிதாம்பிகை!!

பெண்கள் காலுக்கு கொலுசு அணிவித்து அழகு பார்ப்பதை போல் ஜெகன் மாதாவான ஸ்ரீ லலிதாம்பிகையும் தன் அழகான காலுக்கு தங்கக்கொலுசு அணிந்துகொள்ள விரும்பினாளாம்.

திருமீயச்சூரில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகை. இங்குள்ள அன்னைக்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள் அர்ச்சகர்கள்.

ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அன்னை லலிதாம்பிகை. அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்த கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் முன் நின்றால், நமது கவலைகள் எல்லாம் பறந்து போகும்.

பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்ற பக்தை  தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவாராம். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். கடந்த 1999-ம் ஆண்டில் ஒரு நாள் இரவு பக்தையின் கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.

திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாள் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார். மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

இந்நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார். ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் வசதி இல்லை என மறுத்துவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார். அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.

ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். பின்னர் பக்தை தான் கொண்டு வந்த தங்கக்கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

Previous Post
Next Post

Leave a comment