astrology dinamani
கடன் கழுத்தை நெறிக்கிறதா? கவலை வேண்டாம் இன்று இதைச் செய்யுங்க!
2018/12/04

கடன் கழுத்தை நெறிக்கிறதா? கவலை வேண்டாம் இன்று இதைச் செய்யுங்க!

இன்று செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷம் என்றாலே மிகவும் விசேஷம் தாங்க! பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

ரிஷபாரூடராக சிவ பெருமானுக்கு பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷமும் விலகும் என்று சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைப்பிடித்தால் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்கக்கூடியது. வேறு விதமாகக் கூறினால் தோஷங்களைக் குறிக்கும் எனலாம். பணமாகப் பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத, பித்ரு, ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவற்றை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பது மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலைப் பெறலாம். கிடைத்தற்கு அரிய நாள் இது.

சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்தப் பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம். எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனையும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும், துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இலவசமாகவே கிடைத்திடும்.

கடன் தொல்லை

இன்று கடன் பிரச்னை என்பது இல்லாத நபர்களே இல்லை எனும் அளவுக்கு கிரெடிட் கார்ட் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் கையில் பணம் இல்லாவிட்டாலும் தகுதிக்கு மீறி பொருட்களை வாங்கி அவஸ்தைப்படுவது பலருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாகச்  சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். அந்நிய கலாசாரத்தின் மோகத்தால் தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறை பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகப்பெரிய பிரச்னையாக அமையக்கூடியது.

சில நேரங்களில் எதிர்பாராத சூழல் கூட ஒருவரை மிகப்பெரும் கடனாளியாக்கிவிடும். அந்த வகையில் தற்போது கஜா புயலின் கோர தாண்டவத்தால் பலரும் வாழ்வாதாரம் இழந்த நிலையில் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். அவ்வாறு வாங்கிய கடனை எப்படித் திருப்பி அடைப்பது எனும் கவலை பலருக்கு ஏற்படுவது இயற்கைதானே!

ஜோதிட ரீதியாக கடனாளியாகும் அமைப்பு யாருக்கு?

ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்தச் சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது எனப் பார்ப்போம். ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையைப் பற்றி கூறும் அமைப்பாகும்.

ஜாதகப்படி லக்னாதிபதி ஆறாம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்தக் காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்.

லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும் ஆறாவது வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர்.

லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி ஆறாம் வீட்டில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடக்கூடாது. மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்தக் கடன் இவர் தலையில் வந்துதான் விடியும்.

ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.

லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக கடன் வாங்கித் திரும்ப அடைத்திடுவார். ஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டப்படுவர். ஆறாம்பாவத்தோடு தொடர்புகொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்த காரணத்திற்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.

ஒருவர் ஜெனன ஜாதகத்தில் உள்ள சனைச்சரனை கோச்சாரக சனி கடக்கும்போது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படும். பல தோல்விகள், வருமானம் இழப்பு, கடன் வாங்கும் சூழல் ஏற்படும். ஒருவர் ஜாதகத்தில் சனி கேது எந்த விதத்தில் இணைவு பெற்றாலும் அது வாழ்க்கையில் வருமானமற்ற நிலையை ஏற்படுத்தும். மேலும், மிகப்பெரிய கடனை ஏற்படுத்தி வாழ்க்கையில் விரக்தி நிலையை ஏற்படுத்தும். கோச்சாரக சனியும் கேதுவும் ஜெனன சனி மற்றும் கேதுவை கடக்கும்போது இதன் தாக்கத்தை உணரமுடியும்.

தனகாரக குரு ஒருவர் ஜாதகத்தில் 1/5/9 அதிபதியாக ஆறு மட்டும் எட்டில் நின்றாலும் குரு பகவான் ஆறு/எட்டு/பன்னிரண்டாம் அதிபதியாகி தசாபுக்தியை நடத்தினாலும், ஆறாம் வீட்டை கோசாரக குரு கடந்தாலும் பெரும் கடனாளியாக நேரும். குரு பகவான் ஜெனன ஜாதகத்திலோ கோச்சாரத்திலோ ஆறாமிடத்தில் நின்று விட்டால் கேட்காமலே கடன் கொடுத்து கடனாளியாக்கிவிடுவர்.

எப்போது கடன் வாங்கக் கூடாது?

ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாகப் பயணம் செய்யும்போது கடன் வாங்கக் கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.

குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன அடைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்யக்கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக் கூடாது.

முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

கடன் பிரச்னையில் இருந்து தீர்வு

ஒருவருக்கு திடீர் என மிகப்பெரிய அளவில் கடன் ஏற்பட்டால் உடனே அவர்கள் குல தெய்வ வழிபாடு, பித்ரு கடன் ஆகியவை ஒழுங்காக செய்கிறார்களா என ஆராய்ந்தாலே தெரியும்.  குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், பித்ருக்களுக்கான தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை செய்ய மறந்தவர்கள் மற்றும் கடனே என்று செய்பவர்கள் இவர்களுக்கெல்லாம் திடீரேன கடன் ஏற்பட்டு அல்லல் படுவார்கள்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாலிக்கிறார் பரமேஸ்வரன். இது கடன் நிவர்த்தி திருத்தலம் ஆகும். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் (ருண விமோசன லிங்கேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார். இந்த ருணவிமோசனரை பிரதோஷம் அன்று வழிபடுவது சிறப்பு. அதிலும் ருணவிமோசன பிரதோஷத்தில் வழிபட தீராத கடன்களும் தீரும்.

எந்தக் காரணத்திற்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனைஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்கிரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். சனைஸ்வர பகவான் கன்னியில் அமர்ந்துவிட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்பட்டு “காலைகடனை” கூட அடைக்க முடியாத நிலை ஏற்படும். கடனிலிருந்து விடுபடத் தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வப்போது சென்று வரவேண்டும். மேலும் சனைஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.

ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும். ஸ்வாதி நக்ஷத்திரத்திலும் செவ்வாய்க் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தைக் கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பானக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். சென்னை வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அரக்கோணம் அருகில் உள்ள சோளிங்கர், சிங்ககிரி, செங்கல்பட்டு அருகில் சிங்கப்பெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.

ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியைப் பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபடத் தீராத கடன் தீரும்.

மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.

ஜாதகத்தில் எந்த விதத்தில் சனி-கேது இணைவு பெற்றும் அதனால் கடன் தொல்லையில் சிக்கியவர்கள் சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் சென்று தரிசித்துவரக் கடன் தொல்லைகள் விரைவில் தீரும்.

குளிகை காலத்தில் செய்யும் செயல் வளர்ச்சி அடையும் எனச் சாஸ்திரம் கூறுகிறது. எனவே பலரும் குளிகை காலத்தில் தங்க நகை வாங்குவது, கடனடைப்பது போன்ற செயல்களைச் செய்வது வழக்கம்.

மேற்கண்ட பரிகாரங்களை கடன் வாங்கியவர்கள் மட்டுமல்லாது, கடன் கொடுத்து ஏமாளியானவர்களும் செய்துவர நமக்குச் சேரவேண்டிய நியாயமான கடன் தொகை வசூலாகும்.

– அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

Previous Post
Next Post

Leave a comment