astrology dinamani
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே தரிசனம்!
2013/12/16

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே தரிசனம்!

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது திருமலைராயன்பட்டினம். 108 கோயில்கள், 108 திருக்குளங்கள் உள்ள சிறப்பு பெற்ற தலம். இங்குதான் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் அருள்புரிகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே தரிசனம் தரும் ஆயிரங்காளியம்மனின் வரலாறு சுவாரஸ்யமானது.

அம்பிகையை நினைத்து அருந்தவம் புரிந்தார் மன்னர் ஒருவர். அவருக்கு இரங்கிய அன்னை, “நான் ஒரு பெட்டியில் அவதரிப்பேன். என்னை எழுந்தருளச் செய்து வழிபடு” என்று சொல்லி மறைந்தாள். அவ்வாறே மன்னரும் ஒரு பெட்டியைக் கண்டெடுத்தார். அதில் அன்னையைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். அம்பாள் கூறியவாறு தினமும் அவளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டார். இந்நிலையில் மீண்டும் மன்னரின் முன் தோன்றிய அன்னை, “நீ என் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுவிட்டாய். எனவே உனது வழிபாடு காலம் முடிந்துவிட்டது. மீண்டும் என்னை பெட்டியில் வைத்து கடலில் விட்டுவிடு” என்றாள். மன்னரும் அன்னையின் விக்ரகத்தை பெட்டியில் வைத்து கடலில் விட்டார். அவள் கூறியபடி அதில் ஓர் ஓலைச்சுவடியையும் எழுதி வைத்தார்.

templeகடலில் வந்த பெட்டி திருமலைராயன்பட்டினம் பகுதியில் ஒதுங்கியது. அச்சமயத்தில் ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை, தான் கடலின் மீதிருப்பதாகச் சொன்னாள். அவரும் பெட்டியைக் கண்டு அதைத் திறந்தார். அன்னையைக் கண்டு அகமகிழ்ந்தார். மடம் ஒன்றில் பெட்டியைக் கொண்டுவந்து வைத்தார். ஓலைச் சுவடியில் குறிப்பிட்டிருந்தபடி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்பாளை பெட்டியிலிருந்து எழுந்தருளச் செய்து மகா பூஜை நடத்தினார். அன்று தொடங்கிய இவ்விழா நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. அன்னை ஆயிரங்காளியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இவ்விழாவில், 2 நாள்கள் மட்டுமே அம்பாளை தரிசிக்க முடியும். வைகாசி மாத வளர்பிறையில் இரவு பெட்டி திறக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெட்டியில் வைத்த எலுமிச்சை, மஞ்சள் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

மறுநாள் 6 திரைகளுக்குப் அப்பால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறும். அன்று மாலை அம்மனின் பெயருக்கு ஏற்றார்போல் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீச்சுவரர் கோயிலில் இருந்து ஆயிரம் தட்டுகளில் பழங்கள் ஆயிரங்காளியம்மனுக்கு மேள தாளம், வாண வேடிக்கையுடன் கொண்டுவரப்படுகிறது.

மறுநாள் அதிகாலை இந்த சீர்வரிசை ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் மடாலயத்துக்கு வந்து சேர்கிறது. அங்கு பல்வேறு சித்ரான்னங்களுடன் பிரம்மாண்டமான தளியல் போடப்படுகிறது. திரை விலக்கி மகா தீபாராதனையும் நடைபெறும். இதைத் தொடர்ந்து இரண்டு பகல், இரவாக அம்பாளை பக்தர்கள் தரிசிக்க முடியும். மூன்றாம் நாள் சூரிய உதயத்திற்கு முன் அம்பாளை மீண்டும் பெட்டியில் வைத்துவிடுவார்கள்.

“ஆயிரங்காளி’ என்ற பெயருக்கு ஏற்ப கம்பீரமான தோற்றத்துடன் அன்னை அருள்பாலிக்கிறாள். விழாவின்போது ஆயிரக்கணக்கானவர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் இவ்வாண்டு மே 23, 24 ஆகிய தேதிகளில் விழா நடைபெறுகிறது. அடுத்த மகா பூஜை 2017-ஆம் ஆண்டுதான் நடைபெறும்.

காரைக்கால் – நாகூர் இடையே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலைராயன்பட்டினம். இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருப்பதைத் தவிர்த்து இந்த ஆண்டே ஆயிரங்காளியம்மனை வழிபட்டு ஆனந்தம் பெறுவோம்.

மேலும் தகவலுக்கு 04368-233888

Previous Post
Next Post