astrology dinamani
ஏன் கிருஷ்ணருக்கு மட்டும் இதெல்லாம் பிடிக்கிறது?
2019/08/23

ஏன் கிருஷ்ணருக்கு மட்டும் இதெல்லாம் பிடிக்கிறது?

மகிமையை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதியில் அவதரித்தவர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. இந்நாளில் மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரிப்பர். மனித வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திய ஸ்ரீகிருஷ்ண பகவானின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கிருஷ்ணருக்கு ஏன் துளசி மிகவும் பிடிக்கும்?

திருமால் தன் மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்திலுள்ள நந்தவனத்தில் உலா வருவார். அங்கு மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வரும் திருமால், துளசி செடி வந்ததும் அதன் அருகே நின்று கொள்வார்.

துளசியின் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொல்வார். லட்சுமி! இந்த துளசி, அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு என்று புகழ்வார்.

ஆனால், துளசியை மட்டும் கிருஷ்ணர் புகழ்கிறாரே என மலர் செடிகள் வருத்தப்படுவதில்லை. இந்த துளசியின் அருகில் நாம் நின்றதால் தானே திருமாலும், லட்சுமியும் இங்கே வரும்போது, அவர்களை நாம் ஒருசேர தரிசிக்க முடிகிறது, என்று மகிழ்ச்சியடையும். இதனால் தான், பெருமைக்குரிய துளசியை கிருஷ்ணருக்கு மாலையாக அணிவிக்கிறோம்.

துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும்.

குழந்தை கிருஷ்ணர் ஏன் ஆலிலையில் படுத்திருக்கிறார்?

கிருஷ்ணர் ஆலிலையில் படுப்பதற்கு காரணம் உண்டு. தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.

ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். மனிதருக்கு ஒரு தத்துவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே கண்ணன் ஆலிலையில் படுத்திருக்கிறான்.

கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது?

கண்ணனின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பது இந்த மயில் இறகு. கிருஷ்ணர் ஆயர்பாடி புழுதியில் சிறுவர்களுடன் விளையாடுவான். ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது.

அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டான். இதை கண்ட ஆயர்பாடி சிறுவர்கள் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்தார்கள்.

அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

கண்ணனின் திருபாதத்தை வீட்டில் கோலமாக ஏன் வரைகிறோம்?

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார்.

இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.

Previous Post
Next Post

Leave a comment