astrology dinamani
இதைச் சொன்னால் நினைத்ததை அடையலாம்!
2017/11/09

இதைச் சொன்னால் நினைத்ததை அடையலாம்!

தேவிக்கு நிகர் வேறு ஏதும் தெய்வம் உண்டோ? லோகத்தை காத்து ரட்சிப்பவளான அன்னை திரிபுரசுந்தரியை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட மகா புண்ணியம் நமக்குக் கிடைக்குமாம்.

இவளின் நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு ஒருநாளும் ஒரு குறையும் இல்லாமல் நம்மைக் காத்து இரட்சிப்பாள். அப்படிப்பட்ட விசேஷம் படைத்த அன்னை லலிதாம்பிகையின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்காரம், திரோதானம், அனுக்கிரகம் இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின் தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துவதாக வர்ணிக்கப்படுகிறாள் இந்த ஸ்லோகத்தில். அது தான் “லலிதா சகஸ்ரநாமம்”. தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய் இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.

ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

குடந்தைக்கு அருகிலுள்ள திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை கூறுகிறார்….அது என்னவென்று பார்ப்போம்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப் போக்கும். செல்வத்தை அளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். ஶ்ரீவித்யை போன்று மந்திரமோ, ஶ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை எனலாம். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது என்று ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

அன்னையின் ஆயிரம் திருநாமங்களான லலிதா சகஸ்ரநாமத்தை நவராத்திரி தினங்களில் மட்டுமன்றி அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும், தேவிக்கு உகந்த நாட்களில் பொருள் அறிந்து பாராயணம் செய்யலாம். யார் ஒருவர் அனுதினமும் லலிதா சகஸ்ரநாமத்தை சொல்கிறார்களோ, வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக அவர்களை வந்தடையும் என்பது உறுதி.

Previous Post
Next Post

Leave a comment